×

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

புதுடெல்லி:  வலுவான காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாத்தியமே இல்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், “பாஜவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி இடம்பெறாத எந்த கூட்டணிக்கும் வாய்ப்பே இல்லை. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக அமையும் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கியப் பங்கு வகிக்கும். இந்த ஆண்டு கர்நாடகாவிலும், தொடர்ந்து தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் வரவுள்ளன.

இதில் வெற்றி பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. 2024 மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வியூகம் அமைத்து, முடிவெடுப்பார்கள். அதானி மோசடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்காமல் இருப்பது அந்த கட்சிகளின் தனிப்பட்ட முடிவு. அதை பற்றி நான் பேச முடியாது. அதானி மோசடி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற குழுவால் அனைத்து உண்மைகளையும் வௌிக்கொண்டு வர முடியாது. எனவே, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தான் நடத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. காங்கிரசின் கோரிக்கைக்கு 16 எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன” இவ்வாறு கூறினார்.

Tags : Congress ,Jairam Ramesh , Opposition alliance is not possible without Congress: Jairam Ramesh interview
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை...