டென்னிஸ் விளையாடி கொண்டிருந்ததால் சந்திக்க வந்தவர்களை காக்க வைத்தார் புதுவை முதல்வர் வீட்டை ரேஷன் ஊழியர்கள் முற்றுகை: சாலை மறியல் - வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கக்கோரி முதல்வர் ரங்கசாமி வீட்டை ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 550க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது மாதந்தோறும் ரேஷன் அரிசிக்குப் பதில் பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு கடந்த 55 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால்  புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோயில் அருகே உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை குடும்பத்துடன் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டின் அருகே இறகுபந்து விளையாடிக் கொண்டிருந்த முதல்வர் ரங்கசாமி, விளையாடி முடிந்ததும் வந்து அவர்களை  சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் உங்களுக்குத்தான் நாங்கள் ஓட்டு போட்டோம். ஆனால் நீங்களும் கடையை ஏன் திறக்க மறுக்கிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் தான் ஆகப்போகிறது என ரங்கசாமி கூறினார்.

அதைகேட்காமல் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தியதால் டென்ஷனான முதல்வர் ரங்கசாமி, எதையும் கேட்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார். ஆத்திரமடைந்த ரேஷன் கடை ஊழியர்கள், கோரிமேடு- திண்டிவனம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்பி பக்தவத்சலம் தலைமையில் போலீசார் வந்து அவர்களை கைது செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மதியம்  அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: