×

இழந்த பணத்தை மீட்க நூதன மோசடி: ஆன்லைன் ரம்மியால் ரூ.34 லட்சம் கையாடல்: வங்கி உதவி மேலாளர் கைது

வேலூர்: ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622ஐ கையாடல் செய்த வங்கி உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் காட்பாடி காந்தி நகரில் ஸ்டேட் வங்கி கிளையின் ராஸ்மேக் பிரிவு மேலாளர் சிவகுமார். இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு, எஸ்பிஐ இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ராஸ்மேக் பிரிவில் வழங்கப்பட்ட கல்விக்கடன்களுக்கான பிரீமிய தொகை செலுத்தப்படவில்லை என்று புகார் வந்தது. இதன் மீது அவர் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2018 ஜூன் 5ம் தேதி தொடங்கி 2021ஜூலை 1ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பலரது கல்விக்கடனுக்கான பிரீமியம் தொகைகளை செலுத்தாமல் செலுத்தியது போல போலியான ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இவ்வாறு மொத்தம் ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 வரை கையாடல் செய்யப்பட்டிருப்பதும், இதில் அதே வங்கி  உதவி மேலாளர் விருது நகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன்(38) ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர் கல்விக்கடனுக்கான இன்சூரன்ஸ் பிரீமிய தொகையான ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622ஐ தனது கனரா வங்கி மற்றும் பரோடா வங்கி கணக்குகளில் செலுத்தி உடனடியாக அந்த பணத்தை எடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி உதவி மேலாளர் ேயாகேஸ்வர பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைடுயத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து ஸ்டேட் வங்கி ராஸ்மேக் கிளை பிரிவு உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியனை நேற்று கைது செய்தனர். விசாரணையில் யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் தனது பணத்தை இழந்துள்ளார்.  இழந்த பணத்தை மீட்பதற்காக வங்கி இன்சூரன்ஸ் பிரீமிய பணத்தை கையாடல் செய்து, அதை வைத்து மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றதும் தெரிய வந்தது.


Tags : Nuthana Scam to Recover Lost Money: Rs 34 Lakh Manipulation Through Online Rummy: Bank Assistant Manager Arrested
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்