×

பெண்கள் பாலியல் வன்கொடுமை குறித்து பேசியதற்காக ராகுலிடம் டெல்லி போலீஸ் விசாரணை: காங்கிரஸ் கடும் கண்டனம்; தொண்டர்கள் போராட்டம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என பேசியதற்காக ராகுல் காந்திக்கு வீட்டிற்கு நேரில் வந்த டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த ஜனவரி 30ம் தேதி பேசிய அவர், ‘நாட்டில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்றார். ராகுல் பேசி 45 நாட்கள் ஆன நிலையில், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக தன்னை அணுகிய பெண்களின் விவரங்களை ராகுல் தருமாறு கோரி டெல்லி போலீசார் கடந்த 16ம் தேதி நோட்டீஸ் விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான குழு நேற்று காலை ராகுலிடம் வாக்குமூலம் பெற அவரது வீட்டிற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். ராகுலிடம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு ஹூடா தலைமையிலான குழுவினர் ராகுலின் வீட்டிற்குள் சென்று அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா உள்ளிட்ட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீசார் கேள்விக்கு பதிலளித்த ராகுல், யாத்திரை நீண்ட காலம் நடந்ததாகவும், அதன் தகவல்களை சேகரித்து தர 8 முதல் 10 நாட்கள் அவகாசம் வேண்டுமெனவும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் மீண்டும் விசாரிக்க வருவதாக நோட்டீஸ் விடுத்துச் சென்றனர். புதிய நோட்டீஸில் விசாரணை தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே லண்டனில் இந்திய ஜனநாயகம் தொடர்பாக ராகுல் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்கக் கோரி நாடாளுமன்றத்தை பாஜ எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ராகுல் பேசியதற்கு டெல்லி போலீசார் விசாரணை நடத்தியிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது என அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறி உள்ளார். எதற்காக விசாரணை? விசாரணை குறித்து சிறப்பு கமிஷனர் ஹூடா கூறுகையில், ‘‘ராகுலின் யாத்திரை டெல்லி வழியாகவும் சென்றுள்ளது. அவர் கூறியது போல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்களா என விசாரணை மேற்கொண்டோம். பாதிக்கப்பட்ட நபர்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே ராகுல் காந்தி அவரது தரப்பில் விவரங்களை தந்தால் அதன் மூலம் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியும். ராகுல் வெளிநாட்டில் இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே கடந்த 15ம் தேதி அவரை சந்திக்க முயற்சித்தோம். முடியவில்லை. அதனால் 16ம் தேதி நோட்டீஸ் விடுக்கப்பட்டது’’ என்றார்.

* 45 நாட்கள் தாமதித்து விட்டு இப்போது அவசரப்படுவது ஏன்?
போலீஸ் விசாரணையை தொடர்ந்து, நேற்று மாலை 4 மணி அளவில் ராகுல் தனது முதற்கட்ட பதிலை டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைத்தார். தனது 4 பக்க பதிலில் ராகுல், ‘டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை இதற்கு முன் நடக்காத ஒன்று. அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் உள்ளேயும் எடுத்த நிலைப்பாட்டிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? 45 நாட்கள் தாமதித்த போலீசார், தற்போது 2 முறை நேரில் விசாரிக்க வந்து அவசரம் காட்டுவது ஏன்? இதுபோன்ற நடவடிக்கை ஆளுங்கட்சி உட்பட வேறெந்த அரசியல் கட்சி தலைவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளதா? அவர்களின் அரசியல் பிரசாரங்களில் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

* பாஜவினர் மீது பதில் நடவடிக்கை எடுப்போம்
காங்கிரஸ் தலைமையகத்தில் ராஜஸ்தான் முதல்வர் கெலாட், பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தேசிய செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்கி நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது கெலாட், ‘‘ராகுலுக்கு எதிரான சூழலை உருவாக்குவதற்கான பழிவாங்கும், மிரட்டும், துன்புறுத்தும் வழக்கு இது என்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் பிரசாரத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும் விவகாரங்கள் மீது வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஒன்றிய அரசு மோசமான முன்னுதாரணமாகி உள்ளது.

இதே போல, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள், பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் கூறிய கருத்துக்கள் மீது இதே போன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்தார். மேலும், நடைபயணத்தில் ராகுல் பேசி 45 நாட்களுக்குப் பிறகு இது போன்ற நடவடிக்கையை கால தாமதமாக எடுப்பதன் நோக்கம் குறித்தும் காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ‘ராகுல் உண்மையைத்தான் கூறினார் என்றால் அதற்கான விவரங்களை அளிக்க வேண்டியதுதானே? அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை கிடைக்குமல்லவா’ என பாஜ தலைவர்கள் பலர் பதில் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Delhi Police ,Rahul ,Congress , Delhi Police Interrogates Rahul for Talking About Rape Of Women: Congress Strongly Condemns; Volunteers struggle
× RELATED அகமதாபாத்தில் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு..!!