சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. நாளை வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுவை திரும்பப்பெற 21-ம் தேதி கடைசிநாள். மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கூடிய இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் மட்டும் இதுவரை 125-க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்ய 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்திருந்தார். அதன் பின்னர் அனைத்து மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என ஒவ்வொருவரும் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் வேட்புமனுக்களை பெற்று அதனை அதிமுக அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் இதுவரை 125 பேர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி தவிர வேறு யாருடைய பெயரிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த தேர்தலை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பதற்காக சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்த்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, 22-ம் தேதி விசாரிக்க தொடங்கி 24-ம் தேதி அதன் மீதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவினை வெளியிட தடைவிதித்துள்ளார்.
இந்நிலையில், நாளை வேட்புமனு பரிசீலனை தொடங்கி, வேட்புமனுவை திரும்பப்பெற 21-ம் தேதி இறுதி அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 26-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, 27-ம் தேதி தேர்தல் முடிவு என அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.