×

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அவசர வழக்கு அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் முடிவு வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான  தேர்தலை நடத்தலாம். ஆனால், மார்ச் 24ம் தேதிவரை தேர்தல் முடிவை அறிவிக்க  கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவை உரிமை கொண்டாடி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு, நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஜூலை 11ம்தேதி பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் உச்ச நீதிமன்றம், எடப்பாடி அணியினர் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் வேலைகள் கட்சியில் மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்கள், கடந்த வாரம் கூடி இதற்கான ஒப்புதலை அளித்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதுகுறித்து அதிமுக தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட, நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுக சட்ட திட்ட விதியின்படி ‘அதிமுக பொதுச்செயலாளர்’ தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் 18ம் தேதி (நேற்று), 19ம் தேதி (இன்று) ஆகிய 2 நாட்கள் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி மனு தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 21ம் தேதி பிற்பகல் 3 மணி வரை, வேட்பு மனு திரும்ப பெறலாம். 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வருகிற 27ம் தேதி திங்கள் 9 மணி முதல் எண்ணப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். கட்சியின் தலைமை அறிவிப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்புமனுவை வழங்கினார். அவருக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருந்தனர். பின்னர், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து, அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, அவரது சிலை அருகே வேட்புமனுவை வைத்து வழிபட்டார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களும் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மேலும் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தாலும், இன்று மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எடப்பாடி தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை 20ம் தேதி (திங்கள்) காலை 11 மணிக்கு நடைபெறும். வேட்புமனுவை 21ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெறலாம். போட்டி இருந்தால் வருகிற 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்குமாறு மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த அவசர முறையீடு  நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிட்டதாவது: பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு ஒரே ஒரு வேட்பு மனு மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. வேறு எவரும் தாக்கல் செய்யவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நிரந்தர பொதுச்செயலாளராக கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அறிவித்து விட்டு, தற்போது விதிகளுக்கு புறம்பாக கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து புதிய பொதுச்செயலாளரை நியமித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

 ஜெயலலிதாnt கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் விருப்பம். வெள்ளிக்கிழமை காலை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு விசாணைக்கு வந்து தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அன்று மாலையே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவிர பொதுச்செயலாளர் பதவியை வேறு எவரும் வகிக்க முடியாது. சிறிய சங்கங்களுக்கு கூட தேர்தல் நடத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 7 நாட்கள் நோட்டீசாவது வழங்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் அந்த அவகாசம் வழங்கப்படவில்லை. கட்சி விதிகளுக்கு முரணாக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம். எனவே இந்த தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால் பொதுக்குழு தீர்மானம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் செல்லாததாகிவிடும். எனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.

வைத்தியலிங்கம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி வாதிடும் போது,’1 கோடியே 55 லட்சம் அடிப்படை தொண்டர்களின் மூலம் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். ஆனால் மாவட்ட செயலாளர்களின் ஒப்புதலை பெற்று அதன் அடிப்படையில் இந்த தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர். தொண்டர்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடப்படாமல் அவசரகதியில் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.

ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் ஆஜராகி,’உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் தன்னிச்சையாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து வழக்குகள் தொடர எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. அந்த அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்காவிட்டால் எங்கள் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் காலாவதியாகிவிடும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, எடப்பாடி  பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி  வாதிடும்போது, உள்கட்சி விவகாரத்தில் கோர்ட் தலையிடகூடாது என்று உச்ச  நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் பணி தொடங்கி விட்டால் தடை விதிக்க  முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பல தீர்ப்புகளில்   தேர்தல் நடத்தலாம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று தான் உச்ச  நீதிமன்றம் கூறியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் 37 பேர் அவரது  பெயரில்  விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  வேட்பு மனு தாக்கல் தேதி  அறிவிப்பில் தவறு எதுவும் இல்லை. தேர்தலுக்கு தடைவிதிக்க கூடாது. தீர்மானத்தை  எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று  கோர முடியாது.

இது அதிமுக உள்கட்சி விவகாரம் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓபிஎஸ்க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. மனுதாரர்களுக்கு  கட்சியில் ஆதரவு இல்லை. இவர்களுக்கு கட்சியில் ஆதரவு உள்ளதை நிரூபிக்க  சொல்லுங்கள். 8 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து  நீக்கப்பட்டவர்கள்  கட்சியின் நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும். ஒரே  தலைமை வர வேண்டும் என்பது தான் கட்சி உறுப்பினர்களின் கருத்து. பொதுக்குழு  தான் கட்சியின் அதிகாரம் கொண்ட மேல் அமைப்பு. ஜூலை 11 பொதுக்குழு  தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி  பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது.

அதிமுகவின் அஸ்திவாரத்தை  உலுக்கும் வகையில் மனுதாரர்கள் செயல்படுகின்றனர். கட்சி விரோத  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே,  கண்டிப்பாக தடைவிதிக்க கூடாது. உயர்  நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை  பார்த்தும், ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கட்சிக்கு  எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள்  பறிக்கப்படும் என விதிகள் உள்ளன. தேர்தல் பணி தொடங்கி விட்டால் நீதிமன்றம்  தலையிட கூடாது என்றார். அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்  வாதிடும்போது, பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு 4 முறை  தனி நீதிபதியிடமும், 3 முறை  டிவிசன்பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்துள்ளனர்.

கடந்த 2017ம்  ஆண்டிலும் இதேபோன்ற நிலை நிலவியது. பலர் வழக்கு போட்டனர். அப்போதும்  பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது.  அதிமுக கட்சி விதி தெளிவாக  உள்ளது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருக்கிணைப்பாளர்களை 1.50 கோடி தொண்டர்கள்  உருவாக்கினர். அதை மீற முடியாது என்று கூற முடியாது. பொதுக்குழு சர்வ  அதிகாரமும் கொண்டது. தேர்தல் பணி தொடங்கி விட்டால் கோர்ட் உள்கட்சி  விவகாரத்தில் தலையிடக்கூடாது. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தாக்கல்  செய்த பதில் மனுவில் இதை தெளிவாக கூறியுள்ளது. கட்சியில் உள்ள 2643  உறுப்பினர்களில் 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என்றார்.

இதையடுத்து   நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசியம், பொதுக்குழு வழக்கு  ஏப்ரல் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதில், பொதுச்செயலாளர் பதவி  தொடர்பான தீர்மானமும் உள்ளது. அதை எதிர்த்து வழக்கு இருக்கும்போது இந்த  தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து,  ஏப்ரல் 11ம் தேதிக்கு பதிலாக மார்ச் 22ல் பிரதான வழக்கு  விசாரிக்கப்படும். தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்க கூடாது. வழக்கு  விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும்.  24ம் தேதி தீர்ப்பளிக்கப்படும். அதுவரை  தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.


Tags : O.O. ,Pannerselvam ,Chief Secretary ,Chennai High Court , O. Panneerselvam, Urgent case, AIADMK general secretary election result ban, Madras High Court order
× RELATED கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக...