×

அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே கோடை போல் கொளுத்தும் வெயிலால் நெல்லை மாவட்ட அணைகளில் சரியும் நீர்மட்டம்: மின் உற்பத்தியும் 5 மெகாவாட் ஆக குறைந்தது

விகேபுரம்: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே கொளுத்தும் வெயிலால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் மளமளவென வேகமாக சரிந்ததால் அணையில் இருந்து 32 மெகாவாட்டிற்கு பதிலாக 5 மெகா வாட்டாக மின் உற்பத்தி குறைந்துள்ளது. வற்றாத ஜீவ நதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட பல்வேறு அணைகள் அமைந்துள்ளன. இதில் பாபநாசம், சேர்வலாறு அணைகள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் 86,106 ஏக்கர் நிலங்களுக்கான பாசன தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்கின்றன. மேலும் இந்த அணைகள் மூலம் மின் உற்பத்தியும் கணிசமாக நடந்து வருகிறது.
 
ஆனால், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை சரிவரப்பெய்யாமல் பொய்த்துப் போனதால் அணைகளில் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. ஆனாலும், பிசான சாகுபடிக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் தற்போது 44.98 அடி மட்டுமே நீர்மட்டம் உள்ளது. அணையில் நீர்மட்டம் 50 அடிக்கு கீழே சென்றதால் இந்த அணையில் இருந்து மின்சார தேவைக்காக நீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சேர்வலாறு அணையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை.

இதேபோன்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 27.9 அடியாக உள்ளது. 254.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் லோயர் கேம்ப் வழியாக சென்று மின் உற்பத்தி நடைபெறுகிறது. சுமார் 32 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது, குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக ஆற்றில் திறந்துவிடப்படுவதால் அதற்கேற்ப மின்சாரத்துக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், 5 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போல்  கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னர் தற்போதே கோடை போல் கொளுத்தும் வெயிலால் களக்காடு வடக்கு பச்சையாறு அணையும் வறண்டு வருகிறது. தற்போது தற்போது 6 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

Tags : Agni , Before Agni Nakshatra begins, water levels in Nellai district dams fall due to scorching summer sun: power generation also reduced to 5 MW
× RELATED தி.மலையில் புரட்டாசி மாத பவுர்ணமி...