திண்டுக்கல் : திண்டுக்கல் அடுத்த சிறுமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பூங்கா பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்ததுள்ளதாகவும், இது விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் என வனத்துறையினர் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைக்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் உள்ள சீதோஷ்ண நிலை போல் இங்கும் உள்ளதால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் பலர் வந்து ரசித்து வருகின்றனர். ஆனால் இங்கு இயற்கையை ரசிக்கும் அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. அதனால் சுற்றுலா பயணிகள் இங்கு தங்குவதில்லை.
காலையில் வந்து மாலையிலே கிளம்பி விடுகின்றனர். இதற்காக சிறுமலையில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வனத்துறை சார்பில் தற்போது அங்கு கட்டணத்துடன் அனுமதிக்கப்படும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
புவிசார் குறியீடு பெற்ற வாழை: திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறுமலை வனப்பகுதி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட ரோடுகளுடன் இயற்கை எழில் சூழ்ந்து உள்ளது. இங்கு பல ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது.
இந்த மலையில் காட்டு மாடு, காட்டுப்பன்றிகள், கடமான், குரங்கு உள்ளிட்ட பல விதமான வனவிலங்குகள் மற்றும் 127 வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளது. சிறுமலையில் விளையும் பலா, வாழை பழங்களுக்கு தனிச்சுவை உண்டு. மேலும் சிறுமலை வாழை புவிசார் குறியீடும் பெற்றுள்ளது. அதேபோல் பீன்ஸ், அவரை, சவ்சவ், எலுமிச்சை, மிளகு, காபி உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்படுகின்றன. ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்ப நிலை நிலவும் சிறுமலை பகுதியை மாவட்ட நிர்வாகம், சுற்றுலா துறையினர் அடிப்படை வசதிகளை செய்தால் சுற்றுலாவை மேம்படுத்த முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சியில் பூமிபூஜையுடன் நின்றது: இதை ஏற்று சிறுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக தற்போது தென்மலை பகுதியில் வனத்துறை சார்பில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.5 கோடி மதிப்பில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டதோடு நின்று விட்டது. அதன்பின் அதற்கான எந்த பணியும் துவங்கவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் அதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி பணிகள் துரிதமாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது. பல்லுயிர் பூங்காவில் மரத்தாலான அறை, செயற்கை நீருற்று, பல வண்ண பூச்செடிகள், மூலிகை செடிகள், குழந்தைகள் விளையாட பொழுது போக்கு அம்சங்கள், வண்ணத்துப்பூச்சி பூங்கா, குழந்தைகள் பூங்கா, மூலிகை வனம், பல்லுயிர் பூங்கா, மூங்கில் வனம், கிரீன் ஹவுஸ், பேஸ் கார்டன், நட்சத்திர வனம், உணவகம், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் வனத்தில் 4 கிலோ மீட்டர் நடந்து செல்ல ட்ரெக்கிங் ரூட், வனப்பகுதியை உயரமான பகுதியில் இருந்து பார்த்து ரசிக்க உயர் கோபுரம், சுற்றுலா பயணிகள் வனத்தை பற்றி தெரிந்து கொள்ள தகவல் மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.