×

வெளிநாடுகளுக்கு நார் ஏற்றுமதி மந்தம்; தென்னை மட்டைகள் தேக்கம்: பொள்ளாச்சி சுற்றுவட்டார விவசாயிகள் கடும் வேதனை

பொள்ளாச்சி: வெளிநாடுகளுக்கு நார் ஏற்றுமதி மந்தம் அடைந்த நிலையில் தென்னை மட்டைகள் தேக்கம் எதிரொலியாக பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடியே அதிகளவில்  உள்ளது. தென்னை விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். தென்னையில் விளையும் தேங்காயில் இருந்து பிரிக்கப்படும் மட்டை, நாராக மாற்றப்பட்டு அவை வெளி மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, சுமார் 350க்கும் மேற்பட்ட தெழிற்சாலைகள் செயல்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நாரில் 80 சதவீதம் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, நார் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் அச்சமயத்தில், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகமாக இருக்கும். கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெளி நாடுகளுக்கு நார் ஏற்றுமதி அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, அச்சமயத்தில் தென்னை மட்டையின் விலை உயரும். கடந்த ஓராண்டுக்கு முன்பு 1000 மட்டைகள் ரூ.2500 வரை விற்பனையானது. இருப்பினும் நார் உற்பத்திக்காக, உற்பத்தியாளர்கள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனர். பலர் முன்கூட்டியே மட்டைக்கு ஆர்டர் கொடுத்து வாங்கிச்சென்ற நிலையும் நிலவியது.

நார் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்க அதிகரிக்க தென்னை மட்டைக்கு மவுசு கூடிக்கொண்டே போனது. இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டில் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்தது. அடுத்தடுத்து தொடர்ந்து பெய்த மழையால், தென்னைகளில் தேங்காய் உற்பத்தியும் அதிகரித்தது. தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால், அதில் இருந்து உரிக்கப்பட்ட மட்டைகள், தோட்டங்களில் மலைபோல குவியலாக அடுக்கி வைக்கப்பட்டன.

அதன் பின்னர், கடந்த சில மாதமாக வெயிலின் தாக்கம் இருந்த போது, தொழிற்சாலைகளில் நார் உற்பத்தி பணி இடைவிடாமல் நடைபெற்றது. ஆனால், அண்மை காலமாக, வெளி நாடுகளில் பொருளாதார சரிவால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நாரின் அளவு குறைந்தது. அதிலும் சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி குறைந்து, விற்பனை மந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல தொழிற்சாலைகளில் தென்னை நார் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் 1 கிலோ நார் ரூ.13 முதல் ரூ.15 வரை விற்பனையானது. ஆனால், தற்போது 1 கிலோ ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ.10க்கே விலை போகிறது. நாரின் விலை சரிவால், சில தொழிற்சாலைகளில், நார் உற்பத்தி மேற்கொள்வதை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும், நார் உற்பத்தி பாதியளவு குறைவால், தென்னை மட்டையின் விலையும் மிகவும் குறைந்துள்ளது.

சில இடங்களில் ஒரு மட்டை 10 பைசாவுக்கே விற்பனை செய்யப்படுவதாக கூறுப்படுகிறது. 1000 மட்டை ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.150 க்கே விலைபோகிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில், மட்டையின் விலை மிகவும் சரிவால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளுக்கு நார் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட பாதிக்குபாதியாக சரிந்துள்ளதால், உற்பத்தியாளர்களுக்கும் உரிய லாபம் இல்லாமல் போகிறது என கோவை மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.


Tags : Pollachi , Exports of fiber to foreign countries are sluggish; Backlog of coconuts: Farmers around Pollachi suffer
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!