×

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் குறைந்து வரும் பன்னீர் திராட்சை விவசாயம்: ஒயின் தொழிற்சாலை துவங்க கோரிக்கை

தேவாரம்: மாவட்டத்தில் குறைந்து வரும் திராட்சை விவசாயத்தை பாதுகாத்திட உடனடியாக தமிழக அரசு அரசு ஒயின் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய செழிப்பு மிகுந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக சின்னமனூர் பகுதிகளில் வாழை விவசாயம், கம்பம் பள்ளத்தாக்கில் நெல் விவசாயம், காமயகவுண்டன்பட்டியில் திராட்சை விவசாயம், ஓடைப்பட்டி பகுதிகளில் சீட்லெஸ் திராட்சை விவசாயம், தேனி ஆண்டிப்பட்டி பகுதியில் காய்கறி விவசாயம் என ஒவ்வொரு பகுதிகளிலும் விவசாயத்திற்கு என தனி இடம் உண்டு. இதில் ஆண்டின் 365 நாட்களும் விளைச்சல் தரக்கூடிய பன்னீர் திராட்சை விவசாயம், கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பில் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் விதையில்லா திராட்சை எனப்படும், சீட்லெஸ் ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழனி உள்ளிட்ட பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது. திராட்சை விவசாயத்தை நம்பி காமயக்கவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ஆனைமலைபள் பட்டி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம் என பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ளனர். வருடத்தில் மூன்று முறை அறுவடை செய்யக்கூடிய பன்னீர் திராட்சை விவசாயம் விவசாயிகளுக்கு ஒரு காலத்தில் பணம் கொழிக்கும் தொழிலாக இருந்தது.திராட்சை விவசாயத்தை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை இல்லை. இதனால் திராட்சை விவசாயம் குறைய தொடங்கி உள்ளது.

இதனால் திராட்சை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக பன்னீர் திராட்சை விவசாயத்தை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். பன்னீர் திராட்சை விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பது விவசாய தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. பன்னீர் திராட்சை என்பது ஒவ்வொரு ஆண்டும் 3 முறை அறுவடை செய்யும் அளவிற்கு மண் வளம் உள்ளதால், வருடத்தின் எல்லா நாட்களும், தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது.

மழை, பனி பெய்யும் காலங்களில் பன்னீர் திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. குறிப்பாக விலை குறையும்போது, ஒரு கிலோ ரூ.10க்கு கூட விலைபோவது வழக்கம். விலை குறைந்த காலங்களில், விவசாயிகள் நஷ்டகாலமாக கருதி, விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இதற்காகவே தமிழக அரசே நியாயமான விலையை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும்.  அப்படி கொள்முதல் செய்யும் பன்னீர் திராட்சையில் ஒயின் (திராட்சை ரசம்), அரசே தயார் செய்தால் எக்காலத்திலும் திராட்சை விவசாயத்திற்கு பாதிப்பே ஏற்படாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Kampam Valley , Dwindling paneer grape cultivation in Kampam Valley: Demand to set up wine industry
× RELATED நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை