×

சேலம் வனக்கோட்டத்தில் கணக்கெடுப்பு; நிலப்பரப்பில் வாழும் 138 வகை பறவை இனங்கள் கண்டுபிடிப்பு: அரியவகை பறவைகளை பார்த்து ஆச்சரியம்

சேலம்: சேலம் வனக்கோட்ட பகுதியில் நடந்த நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பில், 138 வகை பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரகதப்புறா, மாம்பழச்சிட்டு, சூறைக்குருவி, இந்திய பெருங்கண்ணி உள்ளிட்ட அரியவகை பறவைகளை பார்த்து வனத்துறையினர் ஆச்சரியமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் ஈரநில பரப்பில் வாழும் பறவைகள் மற்றும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், ஈரநிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 28, 29ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி, மாநில அளவில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பை வனத்துறை நடத்தியது. சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர் வனக்கோட்டங்களில் தலா 20 இடங்கள் வீதம் மொத்தமாக 40 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், சேலம் வனக்கோட்டத்தில் வனத்துறை அலுவலர்கள், பறவை ஆர்வலர்கள், சேலம் பெரியார் பல்கலைக்கழக  விலங்கியல் துறை மாணவர்கள், சேலம் இயற்கை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் இணைந்து கணக்கெடுப்பை நடத்தினர். குரும்பப்பட்டி, பண்ணிக்கரடு, வாணியார், மஞ்சவாடி, லோக்கூர், வெள்ளாளகுண்டம்,  ஜல்லூத்து உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும், குரால்நத்தம்,  பொம்மியம்பட்டி, எஸ்.பாளையம், விநாயகம்பட்டி உள்ளிட்ட ஊர் பகுதிகளிலும்  என 20 இடங்களில் பறவைகளை பார்த்து, அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கணக்கெடுத்தனர்.

இக்கணக்கெடுப்பில், வேதிவால் குருவி, நீலவால் பஞ்சுருட்டான், சின்னான், மாம்பழச்சிட்டு,  சாம்பல் கதிர் குருவி, மரகதப்புறா (தமிழ்நாட்டின் மாநில பறவை), செங்குயில், கொண்டை  உழவாரன், இந்திய பெருங்கண்ணி, கொண்டை பாம்புண்ணி கழுகு, குடுமி பருந்து,  கருடன், இந்திய கழுகு ஆந்தை, பூமன் ஆந்தை, பச்சை பஞ்சுருட்டான், ஆறு மணி  குருவி, சூறைக் குருவி, நீல முக செண்பகம், சோலை பாடி, செந்தலைக்கிளி, மாங்குயில், செம்மீசை சின்னாள், ஊதா தேன் சிட்டு, தேன் சிட்டு உள்ளிட்ட பல்வேறு அரிய பறவையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 138 வகையான  பறவைகளை கண்டறிந்தனர். இந்த பறவைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை வனத்துறை அதிகாரிகள் தொகுத்துள்ளனர். அதனை மக்கள் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியிட உள்ளனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் வனக்கோட்டப்பகுதியில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளோம். இதில், 138 வகை பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள், 5,726 எண்ணிக்கையில் பறவைகளை பார்த்துள்ளனர். மாநில பறவையான மரகதப்புறா, மாம்பழச்சிட்டு, சூறைக்குருவி, இந்திய பெருங்கண்ணி, ஊதா தேன் சிட்டு, ஆறு மணி குருவி உள்ளிட்ட சில அரிய வகை பறவைகளை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளோம். வனத்தை ஒட்டியிருக்கும் காப்புக்காடு பகுதியில் அதிகப்படியான பறவைகள் வாழ்கின்றன. காட்டை வளர்க்கும் பணியில் ஈடுபடும் உயிரினங்களில் பறவைகளுக்கு முக்கிய இடமுண்டு. அதனால், குருவிகள் வேட்டையை தடுத்து அதனை பாதுகாப்பது நமது கடமையென செயலாற்ற வேண்டும்,’ என்றனர்.


Tags : Salem , Census in Salem Forest; 138 terrestrial bird species discovered: Awe at rare birds
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை