×

ஓட்டேரி - குன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக அம்மன் கோயில் இடிப்பு: போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

பெரம்பூர்: ஓட்டேரி - குன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக அம்மன் கோயில் இடிக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள், கோயில்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி - குன்னூர் நெடுஞ்சாலையில் ஆதி சேமாத்தம்மன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயில் உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. இதற்காக இந்த கோயிலை அகற்ற வேண்டுமென மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் சென்னை திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோயிலை திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகள் அகற்றச் சென்றபோது அப்பகுதி மக்கள் மற்றும் இந்து அமைப்பினர், எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோயிலில் உள்ள சுவாமி சிலைகள் அனைத்தும் எந்தவித பாதிப்பும் இன்றி வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனவும், மேலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.  இதனையடுத்து நேற்று முன்தினம் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலில் இருந்த அம்மன் சிலை உட்பட அனைத்து விக்கிரகங்கள் மற்றும் பொருட்களை கையகப்படுத்தி, அவற்றை அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலில் ஒப்படைத்தனர். அதனை பெருமாள் கோயில் நிர்வாக அலுவலர் திவ்யா பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நேற்று காலை திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி முருகன் தலைமையில், செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சரஸ்வதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 5 மணிக்கு தொடங்கிய இப்பணி 8 மணிக்கு முடிந்தது, முழுவதுமாக கோயில் இடிக்கப்பட்டது. ஏற்கனவே கோயிலை இடிக்க வந்தபோது பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்த காரணத்தினால், எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானிசெல்லப்பா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Amman Temple ,Otteri - Gunnur Highway , Demolition of Amman temple for metro rail work on Otteri-Coonoor highway: Police mobilized to cause commotion
× RELATED விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில்...