×

தங்கம் விலை கிடுகிடு உயர்வு சவரன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் ரூ.880 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை கிடு, கிடுவன உயர்ந்து சவரன் ரூ.44,480க்கு விற்பனையானது. இதன் மூலம், தங்கம் விலை வரலாற்றில் உச்சத்தை தொட்டு சாதனையை படைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை, கடந்த சில மாதங்களாகவே ஏற்றத்துடனே இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சவரனுக்கு ரூ.1,880 வரை உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை, மீண்டும் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது. 14ம் தேதி அன்று தங்கம் விலை சவரன் ரூ.43,120க்கு விற்பனையானது. இந்த தொடர் விலை உயர்வு, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி தங்கம் விலை பெயளரவுக்கு, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,380க்கும், சவரன் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாளே, அதாவது 16ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. 16ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,425க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43400க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து இருந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,450க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,600க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் இப்படியே விலை உயர்ந்தால் சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏறப்பட்டது. நகை வாங்குவோர் அச்சப்பட்ட மாதிரியே நேற்றும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,560க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,480க்கு விற்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை, அதாவது தொடர்ந்து 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்தது. தங்கத்தின் அதிகப்பட்ச விலையாக ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்து 360 தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இந்த சாதனையை தங்கம் விலை படைத்தது. இந்த சாதனையை நேற்றைய தங்கம் விலை உயர்வு முறியடித்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருவது இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் இனி காட்சி பொருளாக மாறி விடுமோ என்று நினைக்க தொடங்கியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர தான் வாய்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:

அமெரிக்காவில் 4 நடுத்தர வங்கிகள் திவாலாகி உள்ளது. அதனுடைய தாக்கம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. காரணம், வங்கிகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், வைப்பு நிதியில் வைத்துள்ள முதலீட்டாளர்கள் இடையே ஒரு பீதி ஏற்பட்டுள்ளது. அவர்கள் பின்வரும் காலங்களில் வைப்பு நிதியில் முதலீடு செய்வது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்ந்துள்ளது. இன்னும் வரும் காலங்களில் தங்கம் விலை அதிகமாகவே உயரும். காரணம், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், தங்கம் விலை 2023ம் வருடம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் சூழல் தான் ஏற்படும் என்றார்.

Tags : Gold price surges past Rs 44k: Rs 880 gain in one day
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...