பிரதமர் மோடி பேச்சு: உணவு பாதுகாப்பின் சவாலை சமாளிக்க சிறுதானியம் உதவும்

புதுடெல்லி: ‘உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் நமக்கு உதவும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்மொழிவைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் உலகளாவிய சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவின் முன்மொழிவு மற்றும் முயற்சிகளால் ஐநா சபை 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது, நாட்டிற்கு மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். சிறுதானியத்தை உலகளாவிய இயக்கமாக மேம்படுத்த இந்தியா தொடர்ந்து செயல்படும்.

தற்போதைய சூழலில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் உள்ள உலகளாவிய சவால்களை சமாளிக்க சிறுதானிய வகைகள் நமக்கு உதவும். பாதகமான தட்பவெப்ப நிலைகளிலும்,ரசாயனங்கள் மற்றும் உரங்கள் இல்லாமலேயே சிறுதானியங்களை தான் விளைவிக்க முடியும். இந்தியாவின் சிறுதானிய திட்டங்கள் மூலம், நாட்டில் உள்ள 2.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும். ஆனாலும் இன்றைய தேசிய உணவு தேவையில் 5 அல்லது 6 சதவீதம் மட்டுமே சிறுதானிய உணவுகள் பங்களிக்கின்றன. இதன் பங்களிப்பை மேலும் அதிகரிக்க விஞ்ஞானிகள், பண்ணை நிபுணர்கள் விரைந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: