×

முத்துக்குமாரசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

தண்டையார்பேட்டை: மண்ணடி தம்புசெட்டி தெருவை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதே தெருவில் உள்ள தனக்கு சொந்தமான 2,652 சதுரஅடி இடத்தில் இருந்த கட்டிடத்தை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். சாமுண்டீஸ்வரி அறக்கட்டளை என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பகுதி மக்கள் பயன்படும் வகையில் அந்த கட்டிடம் மருத்துவமனையாக செயல்பட்டது. இதனை மனிஷ் பி.ஷா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து 12 நபர்களுக்கு உள்வாடகை விட்டு வந்தார். அதில் ஹார்டுவேர்ஸ், வழக்கறிஞர்கள் அலுவலகம் என 12 கடைகள் செயல்பட்டு வந்தன. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில்  வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது.

இந்தநிலையில் அதன் தீர்ப்பு கடந்த வருடம் அக்டோபரில் அறநிலையத்துறைக்கு சாதகமாக வந்தது. இதை எதிர்த்து மனிஷ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது நேற்று முன்தினம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மனிஷ் பி.ஷா சம்பந்தப்பட்ட இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று காலை அறநிலையத்துறை சென்னை மாவட்ட உதவி ஆணையர் பாஸ்கரன், தாசில்தார் திருவேங்கடம், கோயில் செயல் அலுவலர் நற்சோனை மற்றும் எஸ்பிளனேடு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் அந்த இடத்தில் வாடகைக்கு இருந்த 12 நபர்களை காலி செய்து, கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மீட்கப்பட்ட இந்த இடம் சுமார் ₹10 கோடி மதிப்பு என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Muthukumaraswamy ,Charity department , Recovery of ₹10 crore land belonging to Muthukumaraswamy temple: Charity department action
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...