சென்னை: சென்னை அண்ணா நகர் அருகே மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட ஷெனாய் நகர் திருவிக பூங்கா, தற்போது உலக தரத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை ஷெனாய் நகர் திருவிக பூங்கா, மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக கடந்த 2011ம் ஆண்டு மூடப்பட்டது. அந்த இடத்தில் அமைக்கப்பட்ட சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு பூங்காவில் நடைபாதைகள், ஸ்கேட்டிங் மைதானம், பேட்மிண்டன் மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி உள்ளிட்ட வசதிகள் உலக தரத்தில் செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பூங்கா சீரமைப்பு குறித்து இந்த பகுதியை சேர்ந்த பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிறுவனம் நூற்றுக்கணக்கான பழமையான மரங்களை வெட்டி அகற்றியுள்ளதாக மனுதாரர்களில் ஒருவருமான ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து ஷெனாய் நகர் ரயில் நிலையத்தை தானே நேரில் சென்று ஆய்வு செய்வதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று, வழக்கில் தொடர்புடையவர்களுடன் நீதிபதி தண்டபாணி பூங்காவுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் முகமத் சித்திக் தலைமையிலான அதிகாரிகள் நீதிபதி எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்தனர். இதுகுறித்து ஷெனாய் நகர் குடியிருப்பு சங்கத்தை சேர்ந்த சிவக்குமார் கூறும்போது, ‘‘சுரங்க வழித்தடத்திலான மெட்ரோ ரயில் வருவதற்கு முன்பு 25 அடியில் கிடைத்த நிலத்தடி நீரானது, தற்போது 200 அடிக்கு சென்றுவிட்டது. இதனால் தங்களுக்கு தண்ணீருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் மெட்ரோ ரயில் மட்டுமின்றி, வணிக ரீதியிலான கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளதால், வேர்கள் நீண்டும் ஆழமாகவும் செல்லும் மரங்களை பூங்காவில் தற்போது நட முடியாது. இது பசுமையான பூங்காவை அழித்து, மாடி தோட்டம் அமைத்தது போல் தான் இருக்கும். இந்த பிரச்னைகளை நீதிபதியிடம் தெரிவித்துள்ளோம்,’’ என்றார்.
