தாம்பரம் சண்முகம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம்: தாம்பரம் சண்முகம் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் தாம்பரம் மார்க்கெட் உள்ளது. இங்கு, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். முக்கிய பகுதியான இந்த சண்முகம் சாலையில், இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டு இருப்பதால், தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, நெரிசலை தவிர்க்க மாநகராட்சி சார்பில், இருபுறமும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துக் கொண்டே வந்ததால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைதொடர்ந்து, நேற்று தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், சண்முகம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதில், குறிப்பிட்ட சில பகுதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயற்சித்தபோது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுதத்து, மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: