×

மளிகை கடை வைத்து கொடுத்து திருட திட்டம் போட்டு கொடுத்த போலீஸ்காரர் கைது: 3 கொள்ளையரும் சிக்கினர்

ஈரோடு: பெருந்துறை பகுதிகளில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு மூளையாக செயல்பட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் 2021ல் பைக் திருட்டு வழக்கில் செந்தில்குமார் என்ற கார்த்திக்கை(30) தனிப்படை போலீசார் கைது செய்தனர். அந்த தனிப்படை போலீஸ்கார் ராஜிவ்காந்தி, போலீசிடம் சிக்காமல் திருடுவது எப்படி என்று அவருக்கு ஆலோசனை வழங்கியது தெரியவே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்தாண்டு சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கிடம் சில மாதங்களுக்கு முன்பு போலீஸ்காரர் ராஜிவ் காந்தி, பெருந்துறையில் சிசிடிவி இல்லாத பகுதிகள் குறித்து தெரிவித்து திருட திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.

மேலும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க பெருந்துறையில் சிறு மளிகை கடை ஒன்றையும் கார்த்திக் மற்றும் கூட்டாளிகள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், ஒரு கொள்ளை வழக்கில் கார்த்திக் கைதானார். அப்போது நடந்த விசாரணையில் போலீஸ்காரர் ராஜிவ்காந்தி வீட்டில் கொள்ளையர்கள் தங்கி இருந்ததும், அங்கு மளிகை கடை நடத்தியபடி குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் பெருந்துறையில் கொள்ளையர் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் நேற்று முன்தினம் சுற்றிவளைத்து, திசையன்விளை, மகாதேவன்குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்கிற கார்த்திக் (30), மதுரை மேலூர் கருப்பசாமி (31), மணிகண்டன் என்கிற பாலசுப்பிரமணி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் ராஜிவ்காந்தியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கொள்ளையரிடமிருந்து கார், 2 பட்டாக்கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பெருமாநல்லூரில் போலீஸ்காரராக இருந்தபோது, மளிகைக்கடைக்காரரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார். பெருந்துறைக்கு மாறியதும் மளிகை கடை வைக்க ரூ.5 லட்சம் கடன் கேட்டு தராததால் அவரது வீட்டில் கார்த்திக்கை வைத்து கொள்ளையடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

* வியாபாரி அடகு வைத்த ரூ.70 லட்சம் நகை மோசடி எஸ்எஸ்ஐ-சகோதரர் கைது
பாளையங்கோட்டை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42), நகை வியாபாரி. கடந்த 2020ல் கொரோனா பரவலுக்கு முன் 246 பவுன் நகைகளை வங்கியில் அடகு வைத்துள்ளார். கொரோனாவால் பணப்புழக்கம் குறைந்து நகைகளை மீட்க முடியாமல் ரமேஷ்குமார் திணறினார்.இதையடுத்து அவர், பாளை கேடிசி நகரை சேர்ந்த கோமதிநாயகத்திடம் (41) பண உதவி கேட்டுள்ளார். அதன்படி நகைகளை திருப்பிய அவர் ரமேஷ்குமாரிடம் கொடுக்கவில்லை.

மேலும் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்ஐ கண்ணையாவிடம் கோமதிநாயகம் தெரிவித்துள்ளார். அவர் ரமேஷ்குமாரை அழைத்து கொடுத்த பணத்தை வாங்கி கொள்ளும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து ஐகிரவுண்டு போலீசார் விசாரணை நடத்தி, ரூ.70 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக வழக்கு பதிந்து எஸ்எஸ்ஐ கண்ணையா, அவரது சகோதரர் கோமதிநாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

*சாராய வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல் எஸ்எஸ்ஐ-ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
திருப்பத்தூர் டவுன் டிஎம்சி காலனி பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற பெண்ணை 2 நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.அவருடைய மகன் அரவிந்தனை பிடித்து வைத்து விசாரித்து வந்தனர். அவரது டூவீலரை விடுவிக்க சிறப்பு எஸ்ஐ பன்னீர்செல்வம், ஏட்டு சபீர் ஆகியோர் ரூ.4,500 கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆடியோ பதிவு ஆதாரத்துடன் மாவட்ட எஸ்பிக்கு புகார் சென்றது.மேலும் இவர்கள் காவல் நிலையத்திற்கு மின்சார பில் கட்ட வேண்டும் என்று மற்றொரு பெண் சாராய வியாபாரியை மிரட்டி ரூ.3 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் புகார் வந்தது. இதையடுத்து இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி பாலகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார்.

Tags : A policeman who planned to rob a grocery store was arrested: 3 robbers were also caught
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!