அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா மோடிக்கு அண்ணாமலை மிரட்டல்: நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதற்கு தலைவர்கள் பதிலடி

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற பாஜ தலைவர் அண்ணாமலையின் பேச்சால், அதிமுக - பாஜ கூட்டணி முறியும் சூழல் உருவாகியுள்ளது. அவரது பேச்சுக்கு உட்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. மோடி, அமித்ஷா ஆகியோரை நேரடியாக மிரட்டும் வகையில் அவரது பேச்சு உள்ளதால், கூட்டணி குறித்து மேலிடம் சொல்லும் முடிவு தான் இறுதியான முடிவு என்று மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பிரச்னை பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து கட்சி மேலிடம் வரும் 26ம் தேதி டெல்லிக்கு வருமாறு அவருக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் படுதோல்விக்கு பிறகு பாஜ-அதிமுக இடையே மோதல் உருவாகி உள்ளது. அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் யார் பெரியவர் என்ற மோதலும் இருவருக்கும் இடையே எழுந்தது. இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பின் இரு கட்சிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இடைத்தேர்தலில் பன்னீர்செல்வத்துக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவிப்பதுபோல கருதிய எடப்பாடி, தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்தார். இந்தநிலையில், பன்னீர்செல்வம் போட்டியிடவில்லை. எடப்பாடி மட்டும் போட்டியிட்டார். அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஆனாலும் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இடைதேர்தலுக்கு முன்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜவுடனான கூட்டணி தான் காரணம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பாஜவினரை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை.

ஈரோட்டில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்ட பேனரில் பாஜ தலைவர்களின் படங்கள் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் பிரதமர் மோடியின் படம், பாஜ தலைவர்களின் படம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. பாஜவின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்தால் நிச்சயம் தோல்வி தான் என்றும் அதிமுகவினர் கூறி வந்தனர். இடைத்தேர்தல் முடிவு வெளியான போது பாஜ தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்கள் பிரிந்ததால் தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டது என்று தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஆளும்கட்சி மீதும், தேர்தல் ஆணையம் மீதும் குற்றச்சாட்டுகளையே முன்வைத்தார்.

பாஜகவுடனான கூட்டனியால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியாமல் போவதால் அவற்றை பெற வேண்டும் என்பதற்காக பாஜ இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பாஜ தகவல் தொழில் நுட்ப அணித் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்த நிலையில், அடுத்தடுத்து பாஜ நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக பாஜ - அதிமுக இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனைக் கண்டித்து கடந்த மார்ச் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பாஜகவினர் எரித்த சம்பவம் அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் அணியினர் வலியுறுத்திய நிலையில் இபிஎஸ் உருவப்படத்தை எரித்தவர் கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அண்ணாமலை, தமிழ்நாட்டின் பாஜ தலைவராக தான் பணியாற்ற வந்து இருக்கிறேன், தோசை சுடவோ, மேனேஜராக பணியாற்றவோ இங்கு வரவில்லை என காட்டமாக கூறினார். மேலும் தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது, அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பேசிய பாஜ தலைவர் அண்ணாமலை, ‘‘தேர்தலின்போது யாருக்கும் சால்வை போட்டும், குனிந்து செல்லவும் விரும்பவில்லை. பாஜ திராவிட கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதையும் விரும்பவில்லை.

தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். கூட்டணியில் நிறைய சமரசங்களை செய்யச் சொல்கின்றனர். சமரசம் செய்து கூட்டணி ஏற்படுத்தி அந்த வழியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அண்ணாமலை தேவையில்லை. கூட்டணி விஷயத்தில் சமரசம் கிடையாது. பாஜகவை தனித்துப் போட்டியிட வைத்து வெற்றி அடையச் செய்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். வருகிற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன். கூட்டணி விஷயத்தில் சமரசம் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கூட்டம் நடந்த போதே பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கூட்டணி குறித்து பேசும் இடம் இதுவல்ல என்று பதிலடி கொடுத்தார். நாராயணன் திருப்பதியும், அண்ணாமலை பேச்சு தெளிவாக இல்லை. விளக்கமாக கூறுங்கள் என்றார். அண்ணாமலை எந்தக் காரணத்தைக் கொண்டும் ராஜினாமா போன்ற முடிவுகள் குறித்து பேசக் கூடாது என கருநாகராஜன் கண்ணீர் விட்டு பேசினார். அதேநேரத்தில், அண்ணாமலையின் ராஜினாமா மிரட்டல் என்பது மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு நேரடியாக விடப்பட்ட சவால் என்று பாஜ நிர்வாகிகள் கருதுகின்றனர். அவரது இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர். கூட்டணி கிடையாது என்று சொல்ல அண்ணாமலை யார்? கூட்டணிக்கு தலைமை வகிப்பது அதிமுக தான். பாஜ அல்ல.

நாங்கள் தான் அவர்களை சேர்க்கவோ, வெளியேற்ற முடியும் என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர். உட்கட்சிக்குள்ளேயே தலைவர்கள் அண்ணாமலையை வெளிப்படையாக கண்டித்துள்ளனர். பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘கூட்டணி குறித்து அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து. அவரது கருத்துக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை. பாஜ மேலிடம் தான் இதனை முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தார். மேலும் பல தலைவர்கள் அண்ணாமலையின் பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து பாஜ தலைவர் அண்ணாமலை நான் ஏன் இவ்வாறு பேசினேன் என்று மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேற்று சந்தித்து விளக்கம் அளிக்க முடிவு செய்தார். ஆனால் அந்தக் கூட்டத்தை அண்ணாமலை திடீரென்று ரத்து செய்தார்.

அதேநேரத்தில், அண்ணாமலையில் இந்த பேச்சுக்கு, மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து மேலிடத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலை இவ்வாறு பேசியது, பாஜவுக்கு தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே அண்மையில் தமிழகம் வந்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அதிமுகவுடன் மோதல் போக்கு வேண்டாம். கூட்டணி குறித்து நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தெரிவித்தார். அதையும் அண்ணாமலை மீறியுள்ளதாக மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளனர். உட்கட்சிக்குள் பிரச்னை வெடித்ததையடுத்து மேலிடம் பாஜ தலைவர் அண்ணாமலையை வருகிற 26ம் தேதி டெல்லிக்கு வருமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேச உள்ளார். அப்போது அண்ணாமலையின் விளக்கத்தை மேலிடம் ஏற்றுக்கொள்ளுமா அல்லது கண்டிக்குமா என்ற பரபரப்பு பாஜகவினரிடையே இப்போதே நிலவ தொடங்கி உள்ளது. பாஜ மேலிடம் கண்டிக்கும் பட்சத்தில் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜவில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அண்ணாமலை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவர்களும் இந்த பிரச்னையை பயன்படுத்தி அண்ணாமலையை காலி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒரு பக்கம் அதிமுக-பாஜ மோதல் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம் பாஜகவில் அண்ணாமலை மற்றும் அவருக்கு எதிரான தலைவர்கள் ஒன்று சேர்ந்து மோதி வருகின்றனர். இது பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து: நயினார் நாகேந்திரன் ‘நறுக்’ பதில்

நெல்லையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டை  பொறுத்தவரை எந்தக் கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. காங்கிரஸ்,  பாஜ, திமுக, அதிமுக என அனைவரும் கூட்டணி சேர்ந்துதான் போட்டியிடுகிறோம். பாஜ  தனித்துப் போட்டியிடும் என அண்ணாமலை கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து.  அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதுதான் இறுதி  முடிவு. கருத்துக் கூற எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளராக தேர்வாகிறார் என்பது பெரும்பான்மை  உறுப்பினர்கள் ஆதரவுடன், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை  தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் பொதுச் செயலாளர் ஆவார். ஒரு கட்சி என்றால்  பொதுச் செயலாளர் வந்துதானே ஆக வேண்டும். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். பாஜவில் இருந்து பிரிந்து  சென்றவர்கள், நயினார் நாகேந்திரன் கூட அதிருப்தியில் இருப்பதாக  கூறியிருப்பது குறித்து கேட்கிறீர்கள். எனது கருத்தை நான் தான் பிரதிபலிக்க முடியும். வேறு யாரும் பிரதிபலிக்க முடியாது என்றார். இதுவரை அண்ணாமலைக்கு எதிராக கருந்துச் சொல்ல எல்லோரும் பயந்து இருந்த நேரத்தில், தற்போது எல்லோரும் எதிர் கருத்தை சொல்ல ஆரம்பித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: