×

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்தது செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதனால், அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கடந்த ஜூலை 11ம்தேதி பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்தவாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்கள் கூடி இதற்கான ஒப்புதலை அளித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.  அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

அதன் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனாலும், எடப்பாடி தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர் தரப்பு சார்பில் தொடரப்பட்ட 3 வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில்; அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்தது செல்லாது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதம். மேலும் ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.


Tags : Secretary of ,Assembly ,Bannerselvam , Election notification for the post of AIADMK General Secretary is illegal: O. Panneerselvam's letter to the Election Commission..!
× RELATED பாஜக தோல்வி பயத்தில் வெறிகொண்டு...