கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்: அண்ணாமலைக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு

நெல்லை: பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நெல்லையில் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை எந்தக் கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. காங்கிரஸ், பா.ஜ., திமுக என அனைவரும் கூட்டணி சேர்ந்து தான் போட்டியிடுகின்றன. பா.ஜ. தனித்துப் போட்டியிடும் என அண்ணாமலை கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதுதான் இறுதி முடிவு. கருத்துக் கூற எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதிமுகவில் ஆதி ராஜாராம் கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து. எடப்பாடி பழனிச்சாமி, பொதுச் செயலாளராக தேர்வாகிறார்.

பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் பொதுச் செயலாளர் ஆவார். ஒரு கட்சி என்றால் பொதுச் செயலாளர் வந்து தானே ஆக வேண்டும். பா.ஜ. விலிருந்து பிரிந்து சென்றவர்கள்,  நயினார் நாகேந்திரன் கூட அதிருப்தியில் இருப்பதாக கூறியிருக்கிறார்களே என்கிறீர்கள். எனது கருத்தை நான் தான் பிரதிபலிக்க முடியும். வேறு யாரும் பிரதிபலிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி என்றால் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில், அவரது கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறியிருப்பது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: