எழுத்தாளர் பேராசிரியர் மங்கள முருகேசன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பெரியார் சிந்தனையாளர், திராவிட இயக்க எழுத்தாளர் பேராசிரியர் மங்கள முருகேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: பெரியாரிய சிந்தனையாளரும், திராவிட இயக்கத்தின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பேராசிரியர் மங்கள முருகேசன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பேராசிரியர் மங்கள முருகேசன் சுயமரியாதை சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு படைத்தளித்த பெருந்தகை ஆவார்.

“தொண்டில் உயர்ந்த தூயவர் ஈ.வெ.ரா.மணியம்மையார்” என்ற இவரது வரலாற்று நூல், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பரிசு வழங்கப்பட்ட பெருமைக்குரியது. அத்துடன் சூழலியல் குறித்து இவர் எழுதிய “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்ற நூலுக்கும் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கி சிறப்பித்துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் மாறாது நின்று, அவர்களது கொள்கைகளை எந்நாளும் பிரதிபலித்தவர். தமது நுண்மாண் நுழைபுலம் செறிந்த உரைகள் மூலம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே பகுத்தறிவு பேரொளியை பரவசெய்த தலைசிறந்த கல்வியாளர்தான் பேராசிரியர் மங்கள முருகேசன்.

இத்தகைய பெருமை வாய்ந்த அவரின் மறைவு திராவிட இயக்க அறிவுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், சக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

Related Stories: