அண்ணாநகர் டவர் பூங்காவில் தலைமைச் செயலாளர் ஆய்வு: விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரின் மையப்பகுதியில் 15.5 ஏக்கர் பரப்பளவில் அண்ணாநகர் டவர் பூங்கா என்று அழைக்கப்படும் ‘டாக்டர் விஸ்வேஸ்வரர் டவர் பார்க்’ என்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 வருடத்துக்கு முன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் மரங்கள், குளம், செடி வகைகள், புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கலையரங்கம், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யும் வசதியும் உள்ளது. இந்த பூங்கா சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள ‘டவர்’ எனப்படும் கோபுரம் 138 அடி உயரம் மற்றும் 42 மீட்டர் அகலம் உடையது. மேலும் இது சென்னையின் அடையாளமான உள்ளது. இங்குள்ள கோபுரத்தின் வாயிலாக, சென்னையின் மத்திய பகுதியை முழுமையாக கண்டுகளிக்க முடிந்தது. கோபுரத்தின் மீது ஏறி காதல் ஜோடிகள் தற்கொலை செய்வது அதிகரித்துவந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு கோபுரத்தின் மேல் ஏற பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பூங்காவில் நடைபயணம் மேற்கொள்ளும் மக்கள், பொதுமக்கள் ஆகியோர் டவரை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், திமுக ஆட்சி வந்தபிறகு ரூ.90 லட்சம் செலவில் டவர் பூங்கா புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பூங்கா சீரமைப்பு பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘’அண்ணாநகர் டவர் பூங்காவில் பேட்மிட்டன் மைதானம், நடைபயிற்சிக்கான இடம், குழந்தைகள் விளையாட்டு திடல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. பிரமாண்டமாக கட்டுபட்டுவரும் டவரில் இன்னும் சிறுசிறு வேலைகள் இருப்பதாகவும் வேலைகள் முழுமையாக முடிந்தவுடன் விரைவில் திறப்பு தேதி அறிவிக்கப்படும்’ என்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘’அண்ணாநகர் டவர் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருவதால் இதனை பார்ப்பதற்கு அழகாக உள்ளது. அண்ணாநகர் டவர் பூங்கா திறக்கப்பட்டால் பொதுமக்கள் பார்ப்பதற்கு கட்டணம் வசூல் செய்யக் கூடாது’’ என்றனர்.

Related Stories: