×

மெட்ரோ ரயில்வே பணிகளுக்காக 100 ஆண்டுகள் பழமையான அம்மன் கோயில் இடிப்பு: ஓட்டேரியில் பரபரப்பு

பெரம்பூர்: மெட்ரோ ரயில்வே பணிகளுக்காக 100 ஆண்டுகள் பழமையான அம்மன் கோயில் இடிக்கப்பட்டது ஓட்டேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவிக. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி, குன்னூர் நெடுஞ்சாலையில் சுமார் 120 ஆண்டுகள் பழமையான ஆதிசேமாத்தம்மன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயில் உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் வருகிறது. இதற்காக கோவிலை அகற்றவேண்டும் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திருவிக.நகர் மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இதன்படி சில நாட்களுக்கு முன் கோவிலை திருவிக.நகர் மண்டல அதிகாரிகள் அப்புறப்படுத்த சென்றபோது பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், இந்து அமைப்பினர் கோயிலை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி ‘’கோயிலில் உள்ள சாமி சிலைகள் அனைத்தும் எந்தவித பாதிப்பும் இன்றி வேறு இடத்துக்கு மாற்றப்படும். பக்தர்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று கோயிலில் இருந்த அம்மன் சிலை உட்பட அனைத்து விக்கிரகங்கள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான பொருட்களை கையகப்படுத்தி அவற்றை கோயில் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலில் நிர்வாக அலுவலர் திவ்யாவிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், இன்று காலை திருவிக.நகர் மண்டல அதிகாரி முருகன் தலைமையில், செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சரஸ்வதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.

பின்னர் அம்மன் கோயிலை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே கோயிலை இடிக்க வந்தபோது பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்த காரணத்தினால் எம்கேபி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags : Amman ,Otteri , Demolition of 100-year-old Amman temple for metro rail works: stir in Otteri
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்