×

இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா: அண்ணாமலை மிரட்டல் பேச்சு

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். இதனால், அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிவு ஏற்படும் சூழல் உள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது முன்னிலையிலேயே 2ம் கட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாஜக - அதிமுக இடையே கருத்து மோதல் உருவாகி உள்ளது.

அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் யார் பெரியவர் என்ற மோதலும் இருவருக்கும் இடையே எழுந்தது. இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்னையில் இரு கட்சிக்கும் இடையே மோதல் எழுந்தது. பன்னீர்செல்வத்துக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவிப்பதுபோல கருதிய எடப்பாடி, தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்தார். இந்தநிலையில், பன்னீர்செல்வம் அணி போட்டியிடவில்லை. எடப்பாடி அணி மட்டும் போட்டியிட்டது.

எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. ஆனாலும் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இடைதேர்தலுக்கு முன்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி தான் காரணம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே கருத்துகளை தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பாஜகவினரை பிரச்சாரத்துக்கு அழைக்காமலேயே இருந்தது, மேலும் ஈரோட்டில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்ட பேனரில் பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெறவில்லை.

இந்த விவகாரம் பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் பிரதமர் மோடியின் படம், பாஜக தலைவர்களின் படம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. பாஜகவின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்தால் நிச்சயம் தோல்வி தான் என்றும் அதிமுகவினர் கூறி வந்தனர். இடைத்தேர்தல் முடிவு வெளியான போது பாஜக தலைவர் அண்ணாமலை மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார், ஆனால் எடப்பாடி பழனிசாமி தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஆளும்கட்சி மீதும், தேர்தல் ஆணையம் மீதும் குற்றச்சாட்டுகளையே முன்வைத்தார்.

இதன் பின்னர் கடந்த சில நாட்களாக பாஜக - அதிமுக கருத்து மோதல் நிலவி வருகிறது. பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியாமல் போவதால் அவற்றை பெற வேண்டும் என்பதற்காக பாஜக இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பாஜக தகவல் தொழில் நுட்ப அணித் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்த நிலையில், அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதன் காரணமாக பாஜக - அதிமுக இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனைக் கண்டித்து கடந்த மார்ச் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பாஜகவினர் எரித்த சம்பவம் அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜகவினரின் செயலுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இபிஎஸ் உருவப்படத்தை எரித்தவர்கள் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கையை அண்ணாமலை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ வலியுறுத்தி இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் அணியினர் வலியுறுத்திய நிலையில் ஈபிஎஸ் உருவப்படத்தை எரித்தவர் கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அண்ணாமலை கடந்த வாரங்களில் தமிழ்நாட்டின் பாஜக தலைவராக தான் பணியாற்ற வந்து இருக்கிறேன், தோசை சுடவோ, மேனேஜராக பணியாற்றவோ இங்கு வரவில்லை என காட்டமாக கூறினார்.

மேலும் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது, அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி, திருப்பதி நாராயணன்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதில் வரும் நாடாளுமன்ற  தேர்தலுக்கு பூத் கமிட்டி, கட்சிக்கு நிதி வசூலிப்பது பற்றி பேசப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும் தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, திராவிட கட்சிகளுடன்  இணைந்து  பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. நம்முடைய முடிவை நாம் எடுப்போம் கட்சி பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் வரை கட்சி பணிகளில் பிஸியாக இருப்பேன். வருகிற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன். தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற தீராத வேட்கையோடுதான் ஐபிஎஸ் பொறுப்பை விட்டு விட்டு வந்தேன். ஆனால் சமரசங்களை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று பலரும் வற்புறுத்துகின்றனர்.

கூட்டணியிலும் நிறைய சமரங்களை செய்யச் சொல்கின்றனர். சமரசம் செய்து கூட்டணி ஏற்படுத்தி அை் வழியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அண்ணாமலை தேவையில்லை. அப்படி ஒரு சமரசம் தேவையில்லை என்றால் தலைவர் பொறுப்ப அவசியமில்லை. கூட்டணி சமரசங்கள் செய்து கட்சியை கட்டமைத்துச் செல்ல இங்கேயே நிறைய தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் கட்சியை வழிநடத்தலாம். எப்படி இருந்தாலும் யார் வலியுறுத்தினாலும், கூட்டணி விஷயத்தில் சமரசம் கிடையாது. பாஜகவை தனித்துப் போட்டியிட வைத்து வெற்றி அடையச் செய்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்.  

இதையடுத்து, கூட்டத்தில் இருந்த மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, அண்ணாமலை உடைய பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். தொடர்ந்து, மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அண்ணாமலை எந்த காரணத்திற்காகவும் ராஜினாமா போன்ற முடிவுகள் குறித்து பேச கூடாது என கருநாகராஜன் கண்ணீர் விட்டு பேசியுள்ளார்.
அண்ணாமலையின் எண்ணத்தை நிறைவேற்ற பாஜக தொண்டர்கள் போர்ப்படை வீரர்களாக உள்ளனர்.‌

வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என‌ அமர்பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்‌. மேலும் வழக்கமான அண்ணாமலை இப்படி பேச மாட்டார். என்ன நடந்து விட்டது என்று இப்படி பேசுகிறீர்கள். குள்ள நரிகள் ஓலமிடுவதற்காக சிங்கங்கள் பதுங்கக் கூடாது. நீங்கள் பேசுவது குழப்பமாக உள்ளது. முடிவு எதுவானாலும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உங்களை விடுவித்து விட்டு கூட்டணி என்றால் அந்த சமரசம் பாஜகவுக்கும், தொண்டனுக்கும் தேவையில்லை என்றும் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்தார். இதேநேரத்தில் ஏராளமானோர் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள் என்று கேட்டார். இதனால் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியாக பேசிய அண்ணாமலை, கூட்டணி வேண்டும் என்றால், அங்கே அண்ணாமலைக்கு இடமில்லை. அண்ணாமலை ஒரு போதும் தன் நிலையில் இருந்து தாழ்ந்து போக மாட்டான். வரும்முன் எதிர்கொள்ள எல்லோரும் தயாராக இருப்போம். மே 10ம் தேதிக்குப் பிறகு என்ன சூழல் என்பதை பார்த்து விட்டு, அதற்கு ஏற்பட நம்முடைய செயல்பாடுகளை கட்டமைத்துக் கொள்வோம் என்றார்.

பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் மத்தியில் அண்ணாமலை இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜக-அதிமுக இடையே உள்ள உரசல் தற்போது வளர்ந்து கூட்டணி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி தேவையில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளதால், இனி பாஜக, அதிமுக கூட்டணி நீடிக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் பரபரப்பு எழுந்துள்ளது.

Tags : President ,Anamalai , President will resign if alliance with AIADMK: Annamalai threat talk
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...