×

ஊட்டி வேலிவியூவில் இருந்து தொட்டபெட்டாவிற்கு ரோப்கார்-சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி :  ஊட்டி வேலிவியூ பகுதியில் இருந்து தொட்டபெட்டாவிற்கு ரோப்கார் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.  தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், சுற்றுலாத்துறை செயலர் சந்திரமோகன், மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஊட்டி அருகேயுள்ள நடுவட்டம் சின்கோனா பகுதியில் அமைந்துள்ள பழமையான சிறைச்சாலையை ஆய்வு செய்தனர். ஏற்கனவே இந்த சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும், இதனை மேம்படுத்தும் வகையில் நேற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முன் மாதிரியான மாநிலமாக திகழும் வகையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், சுற்றுலாத்துறையிலும் பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், தற்போது ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், பல புதிய சுற்றுலா தலங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகவே வருகின்றனர்.

எனவே, கூடலூர் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பல்வேறு தரப்பினருக்கும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, நடுவட்டம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிறைச்சாலையை மியூசியமாக மாற்றி சுற்றுலா பயணிகள் அதிகளவு இங்கு வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், கூடலூர் அருகேயுள்ள தேவாலா பழப்பண்ணையை பார்வையிட்டு, அங்கு சுற்றுலாவை மேம்படுத்தவும், கூடலூர் பகுதிகளில் சில இடங்களை பார்வையிட்டு அங்கும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

இதன் ஒரு பகுதியாக ஊட்டி வேலிவியூ பகுதியில் இருந்து தொட்டபெட்டாவிற்கு ரோப் கார் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான திட்ட வரைமுறைகள் தயாரித்து அரசுக்கு அனுப்பப்படும், என்றார். இந்த ஆய்வின்போது, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, சில்வர் கிளவட் எஸ்டேட், தேவாலா, கூடலூர் பகுதிகளில் சூழல் சுற்றுலா மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Ropecar ,Ooty Valleyview ,Thoddapetta ,Minister ,Tourism Information , Ooty : Surveys will be carried out on implementation of ropecar project from Ooty Valleyview area to Thottapetta
× RELATED தொடர் கோரிக்கையின் பலனாக பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு அனுமதி