மானாமதுரை பகுதியில் தகிக்கும் வெயிலுக்கு தர்பூசணி விற்பனை விறுவிறு

மானாமதுரை :  கோடை வெயிலின் தாக்கம் இப்போதே துவங்கியதையடுத்து மானாமதுரை உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.  வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கும். கோடை வெயிலால் தோல் நோய்கள், வயிற்று உபாதைகள் வருவதுடன் அம்மை, நீர்கடுப்பு உள்ளிட்ட கோடைகால நோய்கள் மக்கள் வாட்டி வதைக்க தொடங்கும். இவற்றிலிருந்து  தங்களை பாதுகாத்து கொள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இளநீர், நுங்கு, பதநீர், தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சி தரக்குடியவற்றை வாங்கி அருந்துவது வழக்கம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தர்பூசணி, முலாம்பழம் போன்ற குளிர்ச்சி தரக்கூடிய பழங்களின் வருகையும் துவங்கி விட்டது. மானாமதுரையில் கீழ்கரையில் உள்ள காந்தி சிலை, அரசு மேல்நிலை பள்ளி, சிவகங்கை மெயின் ரோடுகளிலும், மேல்கரையில் அண்ணா சிலை, பைபாஸ் ரோடு, புது பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பகுதிகளில் இப்போதே தர்பூசணி கடைகள் முளைத்துள்ளன. தர்ப்பூசணி பழங்களின் வரவால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகு றித்து பழ வியாபாரி பெத்துராசு கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்டம் வீரசோழன், மின்னாகுளம் கிராமங்களில் உள்ள மானாவாரி தோட்டங்களில் தர்பூசணி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து பழங்களை மொத்த வியாபாரத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் மானாமதுரையில் தர்பூசணி விற்பனையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தாண்டு நல்ல மழை பெய்தும் டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களில் வாடகை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிர ஏற்றி, இறக்கும் கூலியும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ.15க்கும் விற்றோம். இந்தாண்டு பழங்களை பாதுகாக்கவும், பறித்து லாரிகளில் ஏற்றவும் கூலி அதிகமாகி விட்டது. மேலும் டீசல் விலை உயர்வால் லாரி வாடகையும் உயர்ந்து விட்டது. வேறுவழியின்றி கிலோ ரூ.20க்கு விற்கிறோம். இந்தாண்டு நல்ல மழை பெய்ததால் தர்பூசணி விளைச்சல் அதிகரித்து உள்ளதையடுத்து கோடை சீசனுக்கு முன்னரே வந்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: