திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக அளவில் தமிழக இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைக்க வேண்டும் என்று விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி, மாவட்டந்தோம் விளையாட்டு போட்டிகளை நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறார். திருவண்ணாமலையில் கடந்த மாதம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 12ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற்றது.

தடகளம், செஸ், கைப்பந்து, இறகு பந்து, கபடி உள்ளிட்ட 5 பிரிவுகளாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டியில், பள்ளி மாணவர்கள், பொது பிரிவினர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான நேற்று 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், ஷாட்புட், பேஸ்கட் பால், பெட்மிட்டன், கோ-கோ, டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடந்தது.அதில், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், விளையாட்டு விடுதி மாணவிகள் உள்பட மொத்தம் 159 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, 2-வது நாளான இன்று கால்பந்து, நீச்சல், கபடி, மல்லர் கம்பம்,யோகா, ஹாக்கி ஆகிய போட்டிகள் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியின் நிறைவு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. அப்போது, போட்டிகளில் பெற்றவர்களுக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்க உள்ளார்.

Related Stories: