×

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து திருடிய பெங்களூர் வாலிபர்கள் 2 பேர் கைது-லேப்டாப், செல்போன் பறிமுதல்

ஊட்டி :  ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து  விலையுயர்ந்த பொருட்களை திருடி வந்த கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த  இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம்  மதிப்புள்ள லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஊட்டி நகருக்கு  வெளியில் உள்ள பைக்காரா, பைன் பாரஸ்ட், தொட்டபெட்டா சிகரம், டீ மியூசியம்  உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி செல்லப்படும் வாகனங்களின் கண்ணாடி  உடைக்கப்பட்டு பணம், லேப்டாப், செல்போன் மற்றும் காரில் இருக்கும் பிற விலை  உயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக  அரங்கேறி வந்தது. வெளி மாவட்ட மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா  பயணிகளின் வாகனங்களில் இத்திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.

இதனை  தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க ஊட்டி டவுன் டிஎஸ்பி யசோதா  மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிக்குமார், உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும்  காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 5ம் தேதி சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவர்  தனது நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். கோத்தகிரி சாலையில்  அமைந்துள்ள தனியார் டீ மியூசியம் சென்று  காரை நிறுத்தினர். காருக்குள் லேப்டாப், 2 செல்போன்கள், தோள் பை, கைப்பை, ரூ.23 ஆயிரம் பணம்,  ஸ்மார்ட் வாட்ச், ஏர்பட், டெபிட், கிரெடிட் அட்டைகள் போன்றவற்றை வைத்து லாக் செய்துவிட்டு சென்றார்.

மாலை 5 மணியளவில் வந்து பார்த்தபோது, காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது பார்த்து  அதிர்ச்சியடைந்தனர். காரின் உள்ளே பார்த்தபோது பொருட்கள்  திருடு போயிருந்தன. தொடர்ந்து சீனிவாசன் ஊட்டி பி1 காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர  விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு  தொட்டபெட்டா சிகரத்தில் கேரளா மாநில சுற்றுலா பயணிகள் தங்களது வாகனத்தை  அப்பகுதியில் நிறுத்திவிட்டு சுற்றி பார்க்க சென்றனர். அந்த காரிலும் பொருட்கள் திருடப்பட்டன. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வந்தனர்.

அந்த காரில்  சிசிடிவி கேமரா பொருத்தியிருந்தனர். அந்த கேமராவை ஆய்வு செய்தபோது, பைக்கில் இருவர், அங்கு வருவதும், காரை  நோட்டம் விடுவதும், அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதிப்படுத்திவிட்டு, காரின் கண்ணாடியை உடைத்து திருடுவதும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி - கோத்தகிரி சாலையில்  சேரிங்கிராஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் இருவர்  சுற்றி திரிந்தனர். கேரளாவை சேர்ந்தவர்களிள் காரில் பொருத்தப்பட்ட வீடியோவில் இருந்த நபர்கள் அணிந்திருந்த ஆடையை  போன்று அவர்கள் அணிந்திருந்ததால், சந்தேகமடைந்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், இருவரையும் பிடித்து  விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பயன்படுத்தி வந்த  பைக்கையும் எடுத்து சென்றனர். அவர்களிடம் பி1 இன்ஸ்பெக்டர் மணிக்குமார்  தலைமையில் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூரை  சேர்ந்த ஆரிப் (20), சுப்பியான்(30) ஆகியோர் என்பதும், கார் கண்ணாடியை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம்  இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஒரு லேப்டாப் மற்றும் செல்போனை பறிமுதல்  செய்தனர். விசாரணைக்கு பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

 இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘‘பெங்களூரை  சேர்ந்த இருவரும் பைக்கில் ஊட்டிக்க வந்து, சுற்றுலா தலங்களில் நிற்கும்  கார்களை நோட்டம் விட்டு உள்ளே விலையுயர்ந்த பொருட்கள் இருந்தால், காரின்  கண்ணாடியை உடைத்து திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.திருடிய பொருட்களை  விற்று செலவு செய்து வந்துள்ளனர். தேவையற்ற பொருட்கள் இருந்தால் அவற்றை  வீசி எறிந்துள்ளனர். பெங்களூரில் இருந்து வந்து தங்கி திருடிவிட்டு  உடனடியாக சென்று விடுவர்.

நீலகிரி மாவட்டத்தில்  இதுவரை 6 கார்களை உடைத்து திருடியுள்ளனர். இவர்கள் மீது பைக்காரா காவல்  நிலையத்தில் இரு வழக்குகளும், ஊட்டி பி1 காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்  பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : Bangalore ,Ooty , Ooty: A man from Bengaluru, Karnataka, broke the windows of tourists' cars and stole valuables in Ooty
× RELATED பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் குத்திக்கொலை ..!!