×

வேலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ₹1.50 கோடி மதிப்பு சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளிக்கு விழுப்புரத்தில் வலை

வேலூர் : வேலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ₹1.50 கோடி மதிப்பு ஐம்பொன் அம்மன் சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியை தேடி தனிப்படை போலீசார் விழுப்புரம் விரைந்துள்ளனர்.வேலூருக்கு ஐம்பொன் சிலை கடத்தப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு 15ம் தேதி இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியூர் எஸ்ஐ ரேகா தலைமையிலான போலீசார் அன்றிரவு அரியூர் திருமலைக்கோடியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது கருவேப்பிலை கட்டுகளுக்கு இடையில் ஒன்றரை அடி உயரமுள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து நடத்திய தீவிர விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் புதுவாணியன்குளம் கிராமத்ைத சேர்ந்த கண்ணன்(45), திருவண்ணாமலை புதுமை மாதா நகர் சர்ச் தெருவை  சேர்ந்த வின்சென்ட்ராஜ்(45) ஆகியோர் என்பதும்,  விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த பிரபா என்பவர்  கமிஷன் அடிப்படையில் விற்றுத்தர சிலையை வழங்கியதும் தெரிய வந்தது. அதன்படி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் சிலையை விற்க திட்டமிட்டது தெரியவந்தது.

தொடர்ந்து ₹1.50 கோடி மதிப்புடைய அம்மன் சிலையை பறிமுதல் செய்த போலீசார், கண்ணன் மற்றும் வின்சென்ட்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளியான பிரபா என்பவரை பிடிக்க தனிப்படை போலீசார் நேற்று விழுப்புரம் விரைந்துள்ளனர். அவர் பிடிபட்டால்தான் இந்த சிலை எந்த கோயிலில் திருடப்பட்டது என்பது தெரிய வரும். மேலும் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vellore , Vellore: Special forces are on the lookout for the main culprit in the theft of the idol of Aimbon Amman, worth ₹1.50 crore, which was seized near Vellore.
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...