×

தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு நல  வாரியத்தின் அடையாள அட்டைகள் மற்றும் உதவித் தொகைக்கான காசோலைகளை மேயர் பிரியா  வழங்கினார். தூய்மைப் பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரால் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த வாரியத்தின் உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் 2008ம் ஆண்டு முதல் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்  தூய்மைப் பணியாளர்களின் நலன்  கருதி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மற்ற நல வாரியங்களில் வழங்கப்படுகின்ற உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் கடந்த 23.12.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.  

தொடர்ந்து,  சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார  இயக்கத்தை சார்ந்த தூய்மைப் பணியாளர்கள், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்  14,001 பேரை தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் கீழ் உறுப்பினராக சேர்ந்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தூய்மைப் பணியாளர் நல வாரியம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளை மேயர் பிரியா நேற்று வடக்கு வட்டார அலுவலகத்தில் வழங்கினார்.

சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார அலுவலகத்திற்கு உட்பட்ட 1 முதல் 5 வரையிலான மண்டலங்களில் 1,938 தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.  இந்த பணியாளர்களில் 1,250 பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.  இவர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகளை வழங்கும் விதமாக,  மேயர்  பிரியா 64 தூய்மைப்பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டமன்ற  உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, துணை மேயர் மகேஷ்குமார், வடக்கு வட்டார  துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன்,  அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

* உதவித்தொகை
தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டையின் மூலம் பணியிடத்தில் விபத்து மரணம், பணியிடம் அல்லாத இடத்தில் விபத்து மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, முதியோர் ஓய்வூதியம், திருமணம், மகப்பேறு மற்றும் கண் கண்ணாடி வாங்குதல் உள்ளிட்டவற்றிற்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

* 5,707 பேர் பயன்
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை  5,707 தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகள்  வழங்கப்பட்டுள்ளது.  இதர தகுதியுடைய நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  10ம் வகுப்பு மற்றும் 12ம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு  ரூ.5,500 உதவித் தொகைக்கான காசோலைகளையும், திருமண உதவித் திட்டத்தின்  அடிப்படையில் 2 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.6000 உதவித் தொகைக்கான  காலைகளையும் வழங்கினார்.


Tags : Mayor Priya , Welfare ID Card for Sanitation Workers: Mayor Priya presented
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...