கால்வாயில் மண் சரிந்து சிக்கிய வடமாநில தொழிலாளி சாவு

திருவொற்றியூர்: எண்ணூர் தாழங்குப்பம், உலக நாதபுரம் 6 வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஜாக்கர்கன்ட் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் சுமார் 10அடி ஆழம் பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை பொக்லைன் இந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டில் இருந்த 10 அடி உயரம் 20 அடி அகலமுள்ள மழைநீர் கால்வாய் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது. இதில் உள்ளே இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (26) அம்ரேஷ் குமார் (23) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.

இதைப் பார்த்த சக ஊழியர்கள் எண்ணூர் போலீஸ், மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மண்ணில் புதைந்த 2 பேரையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: