×

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு எம்.பி.ஏ பொது நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்.பி.ஏ படிக்க பொது நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்திய மேலாண்மைக் கழகம் (ஐஐஎம்) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) மேற்படிப்பு பயில நவம்பர் 2023ல் நடைபெறவுள்ள கேட் பொது நுழைவுத் தேர்விற்கான இலவச பயிற்சி வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த (பிஇ,பிடெக், பிஎஸ்சி, பிபிஏ) அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாகவே நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தரம் வாய்ந்த பயிற்சி  நிறுவனத்தின் மூலம் பயிற்சியில் சேர்வதற்கான நுழைவு தேர்வு நடத்தப்பட்டு சீரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்பட்ட  மாணவர்கள் தேசிய அளவிலான CAT, XAT,IIFT,SNAP நுழைவுத் தேர்வு பயிற்சிகள்  வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வுகளான இண்டர்வியூ, குரூப் டிஸ்கசன், எழுத்து தகுதி தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். அட்மிஷன் கிடைத்தவுடன் எம்பிஏ பயில ஆகும் செலவினம் சுமார் ரூ.25 லட்சம் தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக்கடனாக பெற்று தரப்படும். இப்பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு தேதவையான மடிக்கணிணி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும்.

இந்த நுழைவு தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில்  உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். 044-25246344 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Adi Dravidian , Free Coaching for MBA Common Entrance Exam for Adi Dravidian, Tribal Students: Collector Info
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...