சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பெரும்பாக்கம் திட்ட பகுதியில் ரூ.53.46 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவினை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரும்பாக்கம் திட்ட பகுதியில் ரூ.53.46 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவினை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: நகர்ப்புற ஏழை குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வீட்டு வசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது.
அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற வசதிகளை உருவாக்கி தரவேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வாரியத்தின் சார்பில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், எழில் நகர் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 4,032 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் திட்டப்பகுதி 1ல் 2,112 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் திட்டப்பகுதி 1 மற்றும் 2ல் 13,152 குடியிருப்புகளும் மற்றும் முன்மாதிரி திட்டப்பகுதியில் 1,152 குடியிருப்புகளும் ஆக மொத்தம் 20,448 குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் பொழுது போக்கிற்காகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறுவர்கள் விளையாடி மகிழவும், 9 பூங்காக்கள் அமைப்பதற்காக ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.53.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஒரு பூங்காவின் பணிகள் முடிவடைந்துள்ளதால் குடியிருப்புதாரர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பூங்காக்களின் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராஜன், மேற்பார்வை பொறியாளர் மாலா, நிர்வாகப் பொறியாளர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.