×

பிரபல ரவுடி மீது புகார் அளித்த துணிக்கடை ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் தருண்குமார் (26). வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் இங்குள்ள 2 துணி கடைகள், குறைந்த விலையில் விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, சண்டை போட்டுக் கொண்டனர். இதில், பாதிக்கப்பட்ட தருண்குமார் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பிரபல ரவுடி வெள்ளை நாகராஜ் (30) என்பவர் மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில் ரவுடி வெள்ளை நாகராஜ் புகார் தொடர்பாக பேசுவதற்காக தருண்குமாரை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே வரும்படி அழைத்துள்ளார்.

அதன் பேரில் நேற்றுமுன்தினம் இரவு தருண்குமார் சென்றபோது செரியன் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 பேர் தருண்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தகவலறிந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தருண்குமாரை வெட்டி விட்டு தப்பி ஓடிய பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாய்ராம் (22), காசிமேடு விநாயகபுரத்தை சேர்ந்த ஜெகன் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி வெள்ளை நாகராஜை தேடி வருகின்றனர்.


Tags : Garment , Garment worker who complained about notorious rowdy slashed with sickle
× RELATED தையல் தொழிலாளர்கள் சங்க ஆண்டு விழா