×

மழைநீரை சேகரித்து, குடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க புறநகரில் 10 ஏரிகளை ரூ.100 கோடியில் மறுசீரமைக்க வடிவமைப்பு பணி தீவிரம்: சிஎம்டிஏ நடவடிக்கை

சென்னை: மழைநீரை சேகரித்து, குடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க புறநகரில் உள்ள 10 ஏரிகளை ரூ.100 கோடியில் மறுசீரமைக்க வடிவமைப்பு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மழை நீரை சேகரித்து, குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி தருவதோடு, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதில் ஏரிகளும், குளங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பல ஏரிகள் ஆக்கிரமிப்பிலும், குப்பைகள் கொட்டும் இடமாகவும், முறையான பராமரிப்பின்றி தூர்ந்தும் காணப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பல ஏரிகளில் போதிய நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, சென்னை நகரின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் புறநகரில் உள்ள ஏரிகளை பராமரித்து, பாதுகாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 10 ஏரிகள் ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான ‘லேக் பிரண்ட் ரீ கனெக்ட்’ எனப்படும் ஏரி வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில், பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் ஆகிய 10 ஏரிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.

இந்த ஏரிகள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் அதன் கட்டமைப்பை இழந்துவிட்டன. எனவே இந்த ஏரிகளும், அதன் முகப்பு பகுதிகளும் சீரமைக்கப்படுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரு தகுதி வாய்ந்த கட்டிட கலைஞர், இயற்கை சார்ந்த கட்டிட கலைஞர், சிவில் இன்ஜினியர் ஆகியோரை கொண்டிருப்பதுடன் மற்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஏரிக்கான வடிவமைப்புகளை உருவாக்கி வருகிற ஏப்ரல் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின் முடிவுகள் வெளியான பிறகு திட்டங்களுக்கான டெண்டர் வருகிற ஜூன் மாதம் இறுதி செய்யப்படும். இந்த ஏரிகள் அனைத்திற்கும் பொதுவாக இருக்க வேண்டிய சில அம்சங்களில் திறந்த வெளிகளும் அடங்கும்.

தற்போதைய ஏரியின் தன்மை, நிலத்தின் அளவு, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்படும். ஏரி அமைப்பு, முகப்பு தோற்றம், பறவைகளுக்கான வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் ஆகிய அனைத்தும் இதன் கட்டமைப்புகளில் ஒரு பகுதியாக இருக்கலாம். நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், ஏரியின் எல்லை மேம்பாடு, தூய்மையான கரை பகுதிகள், தோட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், வாகன நிறுத்தும் வசதிகள், ஆம்பி தியேட்டர்கள், உணவகம், நீர் விளையாட்டுகள், மீன்பிடிதளம், விளையாட்டு பகுதி பொது வசதி, படகு சவாரி போன்ற வடிவமைப்புகளும் இடம் பெற வேண்டும். இந்த ஏரிகள் பொழுதுபோக்கு மற்றும் பொருளாதார சேவைகளுக்கான வாய்ப்பையும் கொண்டிருக்க வேண்டும்.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த ஏரிகளில் தண்ணீரை சேமித்து வைப்பதன் மூலம் சென்னையின் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். மேலும் கோடை காலத்தில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். இந்த திட்டத்தில் சி.எம்.டி.ஏ, சென்னை  மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் ஆகியோர் கைகோர்த்து செயல்பட  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே இடத்தில் பொதுமக்கள் குவியும்  நிலை தவிர்க்கப்பட்டு, தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள  பொழுதுபோக்கு அம்சங்களில் நேரம் செலவிட வாய்ப்பு உண்டாகும். இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஏரியின் தனித்துவமான இடம் மற்றும் இயற்கை அம்சங்களை கருத்தில் கொண்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* சர்வதேச தரத்தில்
ஏரிகளை பொறுத்தவரை நகரின் உள்கட்டமைப்பில் முக்கியமான ஒன்று. பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகின்றன. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. மழை, வெள்ள காலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன. நகரம் வெப்பம் அடையாமல் தடுக்க, பருவநிலை மாற்ற சிக்கல்களை சமாளிக்க முக்கிய பங்காற்றுகின்றன. இதற்காக, முதல்கட்டமாக சென்னையில் உள்ள 10 ஏரிகளில் 100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ஏரிகளை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்துவது, பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டள்ளது.

* கண்காணிப்பு கோபுரம்
இந்த திட்டத்தின் படி, ஏரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குப்பைகள் ஏரி நீரில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகாயத் தாமரைகள் தூர்வாரப்படும். நாட்டு தாவரங்கள் வளர்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏரிகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்படும். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, இருக்கை வசதிகள், இயற்கை விளக்க மையங்கள், பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.

Tags : Rs 100 crore to rehabilitate 10 suburban lakes to harvest rainwater and increase drinking water supply Intensity of design work: CMDA action
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்