×

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காவல் துறை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ். உட்பட பல நிதி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 15 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை வெளி நாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளன.

இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த அரசாங்கம் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை என்பதாலும், தனியார் வங்கிகளும் உடந்தையாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கள் கருப்பு பணத்தை முதலீட்டு செய்கின்றனர். ஒருசில மாதங்களுக்கு மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வட்டி பணத்தை கொடுக்கும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பின்னர் நஷ்ட கணக்கை காண்பித்து நிறுவனங்களை மூடிவிட்டு வெளி நாட்டிற்கு தப்பித்துவிடுகின்றனர். இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்த நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு, தங்களது பணத்தை திரும்ப பெற முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். எனவே, முதலீட்டாளர்களிடம் தங்களது பணத்தை இழந்தது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வழக்குகள் விசாரிக்கபட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

மேலும், மக்களை ஏமாற்றிய முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து விரிவான மனுவை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Arudra ,Hijavu , What is the action taken on complaints against financial institutions like Arudra, Hijavu? Court orders police to file report
× RELATED ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது