×

தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம்: கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்; சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு அன்னதானம், லட்டு

சென்னை: தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா கோஷம் விண்ணை அதிர செய்தது. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு 3 வேளை அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருப்பதியில் பத்மாவதி தாயாருக்கு தனி கோயில் இருப்பதை போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2021 பிப்ரவரி 13ம் தேதியில் கோயில் பணிகளை தொடங்கியது. தற்போது பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 12ம் தேதியில் இருந்து சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடந்து வந்தன.

இதை தொடர்ந்து, பத்மாவதி தாயார் சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு நடந்தது. கோயிலுக்கு தேவையான சிலைகள், திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் பத்மாவதி தாயார் சிலை 3 நாட்கள் நெல் தானியத்திலும், தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் 4½ அடி உயரம், 3½ அடி அகலத்திலான பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான சதுஸ்தனா அர்ச்சனா பூஜை, மூர்த்தி ஹோமம், காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்தது. 9 மணியில் இருந்து 9.30 மணிக்குள் தாயார் சிலை கருவறைக்கு கொண்டு சென்று அங்கு அஷ்டபந்தன பூஜைகள் செய்யப்பட்டு பத்மாவதி தாயார் பிரதிஷ்டை நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்பதி கோயிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு செய்யப்பட்டது. 5 மணி முதல் 6 மணி வரை மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹூதி, 6 மணி முதல் 6.30 மணி வரை கும்ப உத்தப்பன, 7 மணி முதல் 7.15 மணிவரை ஆலய பிரதக்க்ஷனா, 7.15 முதல் 7.30 மணி வரை சம்பாத்ஜய சபர்ஷனம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் நடந்தது. அப்போது கோயில் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா....என்று கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வெளியேயும், கோயிலுக்கு எதிரே உள்ள பாலத்தில் நின்றும் கோஷம் எழுப்பியது விண்ணை அதிர வைக்கும் வகையில் இருந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீசுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காலை 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம் நடந்தது. பிறகு ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா போன்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணியில் இருந்து பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் முடிந்ததும் அனைத்து பக்தர்களுக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, கேசரி, வடை ஆகிய உணவு வகைகள் 3 வேளையும் வழங்கப்பட்டன. பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் கோயிலுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்பட்டது. அத்துடன் பக்தர்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் திருப்பதி லட்டு வழங்கப்பட்டது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தாயார் கோயிலில் இருந்து புறப்பட்டு ஜி.என்.செட்டி ரோடு, வடக்கு போக் சாலை, விஜயராகவாச்சாரி சாலை, டாக்டர் நாயர் ரோடு வழியாக சென்று மீண்டும் திருமாட வீதியை அடையும் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீபத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்ததை முன்னிட்டு சென்னை தி.நகர் பக்தர்கள் வெள்ளத்தில் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : T. ,Sripadmavathy Mother ,Chetty Road ,Sami , T. Nagar G.N. Maha Kumbabhishekam of Sripadmavathy Mother Temple built on Chetty Road: Devotees chant Govinda Govinda in ecstasy; Food and laddu for those who came to have darshan of Sami
× RELATED கார் தொழிற்சாலை தொடங்குகிறார் எலான்...