×

காலை உணவு திட்டத்தால் பள்ளி வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

சென்னை: முதல்வர் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை “மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்” என தொடர் நிகழ்ச்சிகள் மூலம் சென்னை கிழக்கு மாவட்ட திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் 44வது நிகழ்ச்சியாக “கற்போர் போற்றும் சொற்போர்” என்ற பட்டிமன்ற நிகழ்ச்சி கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக ஏற்பாட்டில் செம்பியத்தில் நடந்தது. பகுதிச் செயலாளர் ஐசிஎப் முரளிதரன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.விழாவில், தமிழ்நாடு  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து, அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: கலைஞர் எப்படி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்ந்து முழுமையான சத்துணவை கொண்டு வந்தாரோ, அதேபோல இன்றைக்கு காலை உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தி காட்டியுள்ளார் முதலமைச்சர். காலையில் மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் பள்ளி வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என செய்திகள் வந்துள்ளன. நான் முதல்வன் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை கொண்டு வந்து, நம் வீட்டுப் பிள்ளைகள் பள்ளியில் படிக்க  என்னென்ன படிப்புகள் உள்ளன, எந்தெந்த கல்லூரிகளில் படிக்கலாம், அதற்கு உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி, படிப்பு முடித்து எங்கு வேலைக்கு செல்லலாம் என்றெல்லாம் அதற்கான இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய இளைஞர்கள் கல்வி பெற்றால் மட்டும் போதாது, நல்ல வேலைவாய்ப்பும் பெற வேண்டும் என்று முதலமைச்சர் நினைக்கிறார்.பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார். முதலமைச்சரின் உத்தரவுப்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 77 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இதுவரை ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை முதலமைச்சரின் உத்தரவுப்படி பெற்றுத்தந்து உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,C.V.Ganesan , Increase in number of students coming to school due to breakfast program: Minister C.V.Ganesan informs
× RELATED பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக...