‘மனித வெடிகுண்டாக மாறுவேன்’ என பேசிய உதயகுமாரை கைது செய்யக்கோரி போஸ்டர்

திருப்பூர்: ‘மனித வெடிகுண்டாக மாறுவேன்’ என பொது வெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயக்குமாரை கைது செய்யக்கோரி, அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் திருப்பூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 13ம் தேதி, மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், ‘‘அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்’’ என பேசினார். இந்த கூட்டம் அனுமதியின்றி நடந்ததாக மாஜி அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ உட்பட 2000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாநகரத்தின் ரயில் நிலையம், பேருந்து நிலையம், புஷ்பா தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘மனித வெடிகுண்டாக மாறுவேன் என பொதுவெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயக்குமாரை, தமிழக காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், தேசிய புலனாய்வு முகமை  (என்ஐஏ) மூலம் புலன் விசாரணையை துவக்கிட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டர்கள் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: