திருச்சி சிவாவுடன் நேரு சந்திப்பு

திருச்சி: திருச்சியில் சிவா எம்பி வீட்டிற்கு நேற்று மாலை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆறுதல் கூறினார். திருச்சி சிவா எம்பி வீட்டிற்கு நேற்று மாலை அமைச்சர் கே.என்.நேரு சென்றார். தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பிறகு அரசு தொடர்பான பல நிகழ்ச்சிகள் இருந்தது. எந்த ஊரில் என்ன நிகழ்வு என்பது கூட எனக்கு தெரியாது. மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகர ஆணையர், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை அழைக்கும் இடத்திற்கு நான் செல்வது வழக்கம். அப்படி என்னை அழைத்த போது நான் சென்ற ராஜா காலனி பகுதியில் இறகு பந்து விளையாட்டு மைதானம் திறக்க வேண்டும் என்று கூறினர். அந்த மைதானம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது.

நம்முடைய தொகுதி என்று நான் வந்தேன். இங்கு இருக்கக்கூடிய ஒரு சிலர் எங்களுடைய அண்ணனுடைய பெயரை போடாமல் நீங்கள் எப்படி வரலாம் என்று கேட்டபோது நான் அவர்களை பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை, ‘‘போய் பாருங்கள்,’’ நான் என்ன செய்வேன் என்று கூறிவிட்டு நேரடியாக தஞ்சை மாவட்டம் பூதலூருக்கு நிகழ்ச்சிக்காக சென்று விட்டேன். இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதாக நான் அங்கு இருக்கும்போது எனக்கு தகவல் வந்தது. அவரை வந்து பார்த்தேன், பேசினேன் எங்கள் இருவருடைய மனதிற்குள்ளும் இருந்ததை மனம் விட்டு பேசினோம். இனி இதுபோல் எதுவும் நடக்காது, நடக்கவும் கூடாது, நடக்கவும் நடக்காது என்று நான் கூறிவிட்டேன்,’’என்றார்.

தொடர்ந்து எம்பி சிவா நிருபர்களிடம் பேசுகையில்,‘‘ நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லதாக நடக்கட்டும் என்று தலைவருடைய குரல் எங்களுடைய செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் எங்களுக்குள் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அவருக்கு இந்த சம்பவத்தில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவர் சொன்னார். நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்,’’என்றார்.

Related Stories: