×

‘முதல்வர் ஸ்டாலின் ஐயா காப்பாத்தணும்’ என வீடியோ வெளியான நிலையில் இதய நோய் பாதித்த சிறுவனுக்கு 24 மணி நேரத்திற்குள் அரசு உதவி: கிராம மக்கள் நெகிழ்ச்சி

ராமநாதபுரம்: இதய நோயால் பாதிக்கப்பட்ட பெருநாழி சிறுவன், ‘முதல்வர் ஸ்டாலின் ஐயா காப்பாத்தணும்’ என வீடியோ வெளியிட்ட  24 மணிநேரத்திற்குள் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து உதவிய சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி பஞ்சாயத்து சண்முகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். மனைவி சரண்யா. இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். மகன் கஜன் (4). பிறப்பிலேயே சிறுவன் கஜனின் இதயத்தில் துளை இருந்தது. மேலும் இதயத்திற்கு செல்லும் ரத்த மாற்றுக்குழாயிலும் பிரச்னை இருந்தது.

இதற்காக சிறுவன் தொடர் சிகிச்சையில் இருந்தார். 5 வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதயத்துளை அடைப்பு அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் பெற்றோர் கவலையில் இருந்தனர். தனது நிலை குறித்து சிறுவன் கஜன், வீடியோவில் பதிவு செய்து, பெற்றோர் உதவியுடன் அதை நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், ‘‘என் பெயர் கஜன். பெருநாழியில் இருக்கேன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு, சிகிச்சைக்கு உதவி செய்து முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா காப்பாத்தணும்.

அம்மா அப்பாகிட்ட காசு இல்லை...’’ என கைகளை கூப்பி, மழலைக் குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் எம்எல்ஏவும், அமைச்சருமான ராஜ கண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை தொடர்பு கொண்டு, சிறுவன் சிகிச்சைக்கு உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அவரது உத்தரவின்பேரில், பரமக்குடி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் பிரதாப் தலைமையிலான மருத்துவக்குழுவினர், வீட்டிற்கே சென்று சிறுவனை பரிசோதனை செய்தனர். பிறகு வாகனத்தில் சிறுவன், பெற்றோரை, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிகிச்சைக்கு உதவ வேண்டும் என சிறுவன் பேசிய வீடியோ வெளியான 24 மணிநேரத்திற்குள் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம், பெருநாழி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* கண்ணீர் மல்க பெற்றோர் நன்றி
சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு நிச்சயம் உதவி செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வீடியோ வெளியான அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி சொல்லக் கூட வார்த்தைகள் வரவில்லை. முதல்வர் ஐயாவுக்கு மிக்க நன்றி’’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

* சென்னையில் மேல் சிகிச்சை
சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரதாப் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படும். முதலில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரிவு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக, சிறுவன் கஜன் சென்னை அழைத்து செல்லப்பட உள்ளார்’’ என்றார். மருந்துவ சிகிச்சைக்காக சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் சென்னை செல்வதற்கு, தேவையான முன்பணம் அமைச்சர்  ராஜகண்ணப்பன் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து  உதவிகளும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் உதவியாளர்  தெரிவித்தார்.


Tags : Govt , Govt Helped Boy With Heart Disease Within 24 Hours After Video Released 'Mutalvar Stalin Aya Kappathanam': Village People Responsive
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...