அதிமுக மாஜி எம்எல்ஏ மீது கொலை மிரட்டல் வழக்கு

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மல்லியை சேர்ந்தவர் ராஜவர்மன். சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இவர், தனது நண்பர்கள் சிலருடன், கடந்த 2018ல் ரவிச்சந்திரன் என்பவர் நடத்தும் பட்டாசு தொழிற்சாலையில் பங்குதாரராக சேர்ந்தார். அதன்பின் ஒரு வாரம் கழித்து, தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை என ராஜவர்மன் உள்பட 3 பேர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்தனர். இதையடுத்து ரவிச்சந்திரன் மூவருக்கும் உரிய பங்கு தொகையை கொடுத்துவிட்டு, பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்தார். பட்டாசு தொழில் நல்லபடியாக நடந்து வந்த நிலையில், ராஜவர்மன் மற்றும் அவரது நண்பர்கள், போலியான ஆவணங்களை தயாரித்து, ரவிச்சந்திரனிடம் தாங்கள் இன்னும் பங்குதாரராக உள்ளோம் என கூறி அவரை கடத்தி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் (எண்-2) நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வள்ளி மணாளன், ரவிச்சந்திரன் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், ராஜவர்மன் உள்பட 3 பேர், ஒரு பெண், டிஎஸ்பி, ஒரு எஸ்ஐ ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன்படி, ராஜவர்மன் உட்பட 6 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

Related Stories: