விக்கிரவாண்டி அருகே பயங்கரம் திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி படுகொலை: 2 மணி நேரத்தில் காதலன் கைது

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலியை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த காதலனை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதன், கூலித்தொழிலாளி. இவரது மகள் தரணி (19). விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். மருதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (25), கச்சேரி உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளுக்கு ட்ரம்ஸ் இசைக்கும் கலைஞர்.

இந்நிலையில் தரணியின் ஊருக்கு கச்சேரிக்காக அவ்வப்போது கணேசன் சென்று வருவது வழக்கம். இதில் தரணிக்கும் கணேசனுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சமீப காலமாக கணேசன் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக சந்தேகமடைந்த தரணி, கணேசனிடம் கடந்த 6 மாதமாக பேச்சுவார்த்தையை துண்டித்துள்ளார். இந்நிலையில் தரணி படிப்பு சம்பந்தமாக 6 மாதம் சென்னையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணேசனும் வேலை சம்மந்தமாக 6 மாதம் கேரளாவுக்கு சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் பேச்சு இல்லாமல் இருந்தது.

இதற்கிடையே தரணி மீண்டும் சொந்த ஊருக்கு வந்ததை அறிந்த கணேசன், தனது பைக்கில் நேற்று காலை தரணி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் நின்றுக்கொண்டிருந்த தரணியிடம் கணேசன் பேச முயன்றுள்ளார். ஆனால் தரணி பேச மறுத்து அங்கிருந்து செல்ல முயன்றாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தரணியின் தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளார். இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தரணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியில் பதுங்கியிருந்த கணேசனை 2 மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காததால் கொன்றதாக தெரிவித்து உள்ளார்.

Related Stories: