முன்னாள் அக்னி வீரர்களுக்கு சிஐஎஸ்எப்-ல் 10% இடஒதுக்கீடு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: சிஐஎஸ்எப்-பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளில் சேர கடந்த ஆண்டு ஜுன் 14ம் தேதி ஒன்றிய அரசு கொண்டு வந்த ‘அக்னிபாதை’ என்ற புதிய திட்டத்தில் சேரும் வீரர்கள் அக்னி வீரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மத்திய துணை ராணுவப்படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவு ஆகியவற்றில் காலியாக உள்ள 10 சதவீத பணியிடங்கள் 75 சதவீத முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த 10ம் தேதி, எல்லை பாதுகாப்புப் படையில்(பிஎஸ்எப்)  காலியாக உள்ள பணியிடங்களில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடல்தகுதி தேர்வில் விலக்குடன் கூடிய 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சம் அறிவித்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வௌியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய தொழில் பாதுகாப்புப் படையில்(சிஐஎஸ்எப்) காலியாக உள்ள பணியிடங்களில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடல்தகுதி தேர்வில் விலக்குடன் கூடிய 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். முதல் தொகுதியிலிருந்து ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு 5 ஆண்டுகள் வரையிலும், அடுத்தடுத்த தொகுதிகளிலிருந்து ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பு தளர்த்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: