மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான முக்கிய பணிகள்: ஒன்றிய அமைச்சர் பட்டியலிட்டார்

புதுடெல்லி: மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான முக்கிய ஆயத்த பணிகளை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று பட்டியலிட்டார். மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஒரே நேத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நாடாளுமன்ற குழு கலந்தாலோசித்து சில பரிந்துரைகளை வழங்கியது. இந்த விவகாரத்தில் நடைமுறை சாத்தியம் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் அரசு கருவூலத்திற்கு சேமிப்பு ஏற்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீண்டும் மீண்டும் அமல்படுத்துவதால் நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் எதிர்மறை தாக்கம் ஏற்படுகிறது. அது தவிர்க்கப்படும். அதே போல, தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் செய்யும் செலவுகளும் குறைக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த குறைந்தபட்சம் 5 அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளில் திருத்தம் கொண்டு வர வேண்டி உள்ளது.

இதற்கு முன்பாக, கூட்டாட்சி அமைப்பை கருத்தில் கொண்டு, அனைத்து மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிவது அவசியமாகும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிகப்படியான மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு இயந்திரம் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் மின்னணு இயந்திரங்களுக்காக பல ஆயிரம் கோடி நிதியை செலவழிக்க வேண்டியிருக்கும். மேலும் கூடுதல் வாக்கு மைய பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் தேவையும் இருக்கும். இவ்வாறு அவர் முக்கிய தேவைகளை பட்டியலிட்டார்.

Related Stories: