×

வர்த்தக ரகசியம் என்பதால் மதுபான கொள்முதல் விவரங்களை தர மறுத்த தகவல் அதிகாரி உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை வழங்க மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்க மறுத்ததை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் 2017ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், வணிக ரகசியம் என்று கூறி இந்த விவரங்களை வழங்க மறுத்தது தவறு.  தகவல் பெறும் உரிமை சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமல் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு. டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வது வணிக ரகசியம் அல்ல என்பதால் தகவல் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில், மதுபான கொள்முதல் தொடர்பாக நிறுவனங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வர்த்தக ரகசியம் என்பதால் இந்த விவரங்களை வழங்க முடியாது. தகவல்களை வெளியிட்டால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் மதுபான கொள்முதல், விலை குறித்த விவரங்களை அறிக்கையாக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும், அறிக்கையையும் ஆய்வு செய்த நீதிபதி, எந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விவரங்களை வணிக ரகசியமாக கருதமுடியாது. அரசு நிறுவனமான டாஸ்மாக், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். மதுபானத்தின் விலை என்பது வர்த்தக ரகசியம் அல்ல. பொது நலன் சம்பந்தப்பட்டுள்ளதாலும், பெருந்தொகையை லாபமாக பெற்றிருப்பதாலும், அந்த தொகை அரசு நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாலும், இந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விவரங்களை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : ICourt , Information officer's order on refusal to provide details of liquor purchase as trade secret quashed: ICourt order
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு