×

தனி ஓய்வறை, குழந்தைகள் காப்பகம், பணி மாறுதலில் சலுகை உள்பட பெண் போலீசாருக்கு 9 புதிய அறிவிப்புகள்: மகளிர் காவலர்கள் பொன்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டை முன்னிட்டு ‘அவள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
 தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1973ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் முதன்முதலில் பெண் காவலர்களை நியமித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையில் ஆண் காவலர்களுக்கு நிகராக பெண் காவலர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். பெண்  காவலர்கள் பணி நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் தொடங்கியுள்ளது. இதையடுத்து பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்தது.
அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பொன் விழா ஆண்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சாகசங்களுடன் வெகு விமரிசையாக நேற்று காலை நடந்தது.

சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பெண் காவலர்கள் சிறப்பான அணிவகுப்பு மரியாதையுடன் முதல்வரை வரவேற்றனர். அதுபோல, முதல்வருக்கு டிஜிபி சைலேந்திரபாபு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, அமைச்சர்கள், மேயர் பிரியா, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால், காவலர் வீட்டு வசதி வாரிய கழக தலைவர் விஸ்வநாதன், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள், தலைமை அஞ்சல் அதிகாரி நடராஜன் மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சென்னை பெருநகர காவலில் பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக ரூ.8.50 கோடி செலவில் ‘அவள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, இலச்சினையை அறிமுகம் செய்தார். மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டு சிறப்பு தபால் உறையையும் முதல்வர் வெளியிட்டார். பிறகு 100 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் ‘சென்னை முதல் கன்னியாகுமரி’ வரை மிதிவண்டி தொடர் ஓட்டத்தை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் முதல்வர் ஆனதும் பெண் காவலர்களை ரொம்ப நேரம் வெயிலில்  நிற்க வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்று, பெண் காவலர்கள் சாலைகளில் இருபுறமும் நிற்க வைப்பது தவிர்க்கப்பட்டது. அந்த காலத்தில் காவலர்கள் அனைவரும் அரைக்கால் சட்டைதான் போட்டிருப்பார்கள். அதனை ‘பேண்ட்’ ஆக ஆக்கியவர் கலைஞர். 1973ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை அரசாணை மூலம் கடந்த 5.9.1973ம் தேதி முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டார்.

அதன் விளைவாக, ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 21 பெண் காவலர்கள் 27.12.1973 அன்று பணியில் சேர்க்கப்பட்டார்கள். தொடர்ந்து மகளிர் காவல் ஆணையரும், சென்னை மாநகரத்திலேயே பணியில் அமர்த்தப்பட்டார். திமுக ஆட்சியில் பெண்கள், காவலர்கள் தொடங்கி எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, காவல்துறை கூடுதல் இயக்குநர், காவல்துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் என எல்லா நிலைகளிலும், தமிழ்நாடு காவல் துறையில் இன்று 35,329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என காவல் பணியில்  சேர்ந்த நிலையில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நேரடி நியமன டி.எஸ்.பி. பதவியில் மட்டும் எந்த ஒரு பெண்ணும் பணியில் சேர இயலாத சூழல் இருந்து வந்தது.

இந்நிலையில் 1989ல் திமுக ஆட்சி அமைந்த போது, இத்தகைய குரூப்-1 தேர்வு உயர் பதவிகளை பெண்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே, அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை கலைஞர் அன்றைக்கு  அமல்படுத்தினார். இதன் விளைவாக, குரூப்-1 தேர்வில் பணியில் சேர்ந்த பெண் அதிகாரிகள் பலர், இன்றைக்கு கூடுதல் காவல்துறை இயக்குநராகவும், காவல்துறை தலைவர்களாகவும், காவல் துணை தலைவர்களாகவும், காவல் கண்காணிப்பாளர்களாகவும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாகவும், காவல் துணை கண்காணிப்பாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு பணியில் சேர்ந்த 21 காவல்துறை துணை கண்காணிப்பாளர்களில், 17 பேர் பெண்கள் என்றால், கலைஞர் தொலைநோக்கு பார்வையை நம்மால் இன்றைக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

தற்போது திமுக அரசு அமைந்தவுடன், கொரோனா தொற்று காலத்தில் காலமான காவலர்கள் உள்பட பணியின்போது உயிர் துறந்திருக்கக்கூடிய காவலர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை அளிக்கும் விதமாக, காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களை உருவாக்கி 1,025 பேர் பணியமர்த்தப்பட்டனர். அதிலும், 501 பணியிடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, இளஞ்சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை  கையாள, அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பது அனைத்துக்காவல் உட்கோட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், 41 உட்கோட்டங்களில் இத்தகைய மகளிர் காவல் நிலையங்கள் இல்லாத நிலையில், 2021ம் ஆண்டு நமது அரசு அமைந்தவுடன், 20 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்பட 19 இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐ.நா. அவை, மகளிர் தினத்தை உலக அளவில், “புதுமைகளும், தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்\” என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம்.  

நமது காவல் துறையைப் பொறுத்தவரையில்,  இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள் தான் செயல்படுத்துகிறார்கள். காவல் தொழில்நுட்பப் பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். விரல் ரேகைப் பிரிவில் புதிய தொழில்நுட்பமான நபிஸ் மற்றும் பேக்ட் 7 எனும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் விதமாக விரல்ரேகைப் பிரிவில், 72 பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நாளில் பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ‘ஒன்பது’ வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்குப் பெண் காவலர்கள் பெரும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

* திராவிட மாடல் ஆட்சியில்...
பெண்கள் இன்றைக்கு காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு, ரயில்வே துறை, சி.பி.சி.ஐ.டி., போக்குவரத்து, உளவுத்துறை. லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு காவல் படை, இணைய குற்றப் பிரிவு, கமாண்டோ படை - ஏன்? முதலமைச்சர் பாதுகாப்பு படை என அனைத்துப் பிரிவுகளிலுமே மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர் பணியிடங்களில், 503 காவல் ஆய்வாளர்கள் பெண்கள்தான். அதாவது, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் 37 விழுக்காடு பெண் காவல் ஆய்வாளர்கள் திறம்பட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பணியாற்றி வருகின்றனர்.

9 அறிவிப்புகள்
* பெண் காவலர்கள், குடும்ப தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக, 8 மணி என்று மாற்றியமைக்கப்படும்.
* சென்னை மற்றும் மதுரை ஆகிய பெரு நகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.
* அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.
* ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள், குடும்ப தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.
* பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
* பெண் காவலர்கள், காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்தி செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
* பெண் காவலர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய கலைஞர் நினைவாக, அவரது பெயரில் “கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும்” ஆண்டுதோறும் வழங்கப்படும்.
* பெண் காவலர்களின் தேவைகள், பிரச்னைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, ‘காவல்துறையில் பெண்கள்’ எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
* பெண் காவலர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் ‘‘பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு” ஒன்று அமைக்கப்படும்.

* கலைஞர் நடித்த ‘உதய சூரியன்’
1967ம் ஆண்டு திமுக ஆட்சி முதன்முதலாக மலர்வதற்கு முன்பே காவலர்களின் பிரச்னைக்காக குரல் கொடுத்தவர் கலைஞர். ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதி அதில் கலைஞர் நடித்தார். அந்த நாடகத்தில் போலீஸ்காரர்களின் நிலைமையைச் சுட்டிக் காட்டும் வகையில் ஒரு பாடல், அதை கலைஞரே எழுதினார். அந்த பாட்டுக்காகவே அந்த காலத்தில் அந்த நாடகம் தடை செய்யப்பட்டது. இதை மனதில் வைத்திருந்த கலைஞர், ஆட்சிக்கு வந்ததும், காவலர்களுக்காக தனியாக ஆணையம் அமைத்து ஊதியங்களை உயர்த்தினார்.

* ‘அவள்’ திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி
மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு ரூ.8.50 கோடி செலவில் 4 அம்ச பயிற்சி மற்றும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தி ‘அவள்’ திட்டம் செயல்பட உள்ளது. இந்த திட்டத்தில் சென்னை நகரில் உள்ள 112 பெண்கள் மற்றும் ஆண்கள் சிறார் மன்றங்களில் உள்ள 5,452 பேர் பயனடைவார்கள். அதேபோல் காவல்துறையினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 23,791 பேர் பயனடைவார்கள். சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தொடர்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் என மொத்தம் 50 ஆயிரம் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும்.

* ‘நாட்டு நாட்டு’ பாடல் கலைநிகழ்ச்சியை ரசித்த முதல்வர்
பொன்விழா ஆண்டை முன்னிட்டு 400 கல்லூரி மாணவிகள் பெண் காவலர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது, ஆஸ்கர் விருது வாங்கிய ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏற்றப்படி பெண் காவலர்கள் தற்காப்பு கலை பயிற்சியை செய்து காட்டினர். அதை முதல்வர் மிகவும் உற்சாகமாக கண்டு ரசித்தார். பிறகு பெண் கமாண்டோ படை வீராங்கனைகள் தங்களது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து செய்து காட்டினர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Golden Jubilee of Women Police , 9 new announcements for women cops including separate rest room, childcare facility, duty transfer concessions: Chief Minister M. K. Stalin announced on the Golden Jubilee of Women Police.
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...