×

சிஸ்டர் சிட்டி ஊழல் அமெரிக்காவை அதிர வைத்த நித்யானந்தா: 30 நகரங்களுடன் ஒப்பந்தம் கண்டுபிடிப்பு; நியூஜெர்சி நகரம் ரத்து செய்து அறிவிப்பு

நியூயார்க்: நித்யானந்தாவின் கைலாசா நாடு அமெரிக்காவின் 30 நகரங்களுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக நெவார்க் நகரம் அறிவித்து உள்ளது. இந்தியாவில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடப்பட்ட நித்யானந்தா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் தனியாக ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற பெயரிட்டு தனிநாடாக அறிவித்து இருக்கிறார். அங்கிருந்து அவர் வீடியோக்கள் மூலம் பேசி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 12ம் தேதி கைலாசா நாட்டுடன் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த நிகழ்ச்சி நெவார்க்கில் உள்ள சிட்டி ஹாலில் நடந்தது. இதே போல் 30 க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள்  கைலாசாவுடன் கலாச்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக ரிச்மண்ட், வர்ஜீனியா முதல் டேடன் வரையில் உள்ள நகரங்கள், ஓஹியோ, புளோரிடா உள்ளிட்ட நகரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தநிலையில் நித்யானந்தா பற்றிய விவரங்கள் அமெரிக்காவில் உள்ள நகரங்களின் நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து நெவார்க் நகரம் முதன்முறையாக கைலாசாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. மற்ற நகரங்கள் இதுபற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க நித்யானந்தா தரப்பில் மேலும் பல நகரங்களை அணுகி ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தியதும் தெரிய வந்துள்ளது. வடக்கு கரோலினாவை சேர்ந்த ஜாக்சன்வில் என்பவர் கூறும்போது,’ கைலாசாவுடன் அமெரிக்க நகரங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் உண்மைதான். கைலாசா தெரிவித்த தகவலை அமெரிக்க நகரங்கள் சரிபார்க்கவில்லை. 2 அமெரிக்க எம்பிக்கள் கைலாசா தேசம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் கலிபோர்னியாவைச் சேர்ந்த நார்மா டோரஸ்,  ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ராய் பால்டர்சன்  ஆவர் என்றார். அமெரிக்காவை நித்யானந்தா ஏமாற்றி இருப்பது இப்போது அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


Tags : America ,Nithyananda ,New Jersey City , Sister City Scam Shakes America Nithyananda: Finds Deal With 30 Cities; New Jersey City Cancellation Notice
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...