தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10,097 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை.!

சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்து 97 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம்,  மதுரை, திருவாரூர், இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 3,800க்கும் மேற்பட்ட  ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 980 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1227.23 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 4 சிப்பங்களாக கோரப்பட்டு விலைப்புள்ளிகள் 6.3.2023 அன்று திறக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மதுரை - அலங்காநல்லூர் பகுதியில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1386.66 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான  ஒப்பந்தப்புள்ளிகள் 2 சிப்பங்களாக கோரப்பட்டு, சிப்பம்-1 தொழில்நுட்ப புள்ளிகள் 3.3.2023 அன்று திறக்கப்பட்டு,  சிப்பம் -2  விலைப்புள்ளிகள் 13.2.2023 அன்று திறக்கப்பட்டு  பரிசீலனையில் உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 667 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1062.20 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் (மூன்றாம் முறை) 3 சிப்பங்களாக கோரப்பட்டு  24.3.2023 அன்று திறக்கப்பட உள்ளது. ரூ.3850.76 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரம் - திண்டுக்கல்  மாவட்டங்களுக்கு  கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு   ஒப்பந்தப்புள்ளிகள்  6 சிப்பங்களாக  கோரப்பட்டு, 2 சிப்பங்களுக்கு தொழில்நுட்ப  புள்ளிகள் 23.2.2023 அன்று திறக்கப்பட்டு,  4 சிப்பங்களுக்கு விலைப்புள்ளிகள் 15.3.2023 அன்று திறக்கப்பட்டு பரிசீலினையில் உள்ளது. விருதுநகர் - தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 1286 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1191.05 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் 3 சிப்பங்களாக கோரப்பட்டு,   தொழில்நுட்ப புள்ளிகள் 15.2.2023 அன்று திறக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

ரூ.854.37 கோடி மதிப்பீட்டில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் 3 சிப்பங்களாக கோரப்பட்டு,   தொழில்நுட்ப புள்ளிகள் 8.3.2023 அன்று திறக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 831 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.525.06 கோடி மதிப்பீட்டில்  கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தொழில்நுட்ப புள்ளிகள் 15.2.2023 அன்று திறக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இதில், நாகப்பட்டினம், மதுரை (சிப்பம்-2) மற்றும் இராமநாதபுரம் -திண்டுக்கல் ஆகிய 3 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கான விலைப்புள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இம்மூன்று கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் 31.3.2023க்குள் பணி ஆணை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்காணும் பணிகள் அனைத்தும்,  தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிகளின்படி  ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் தலைமைப் பொறியாளர் முன்னிலையில் திறக்கப்படும். தொழில்நுட்பப் புள்ளிகள் தலைமைப் பொறியாளர் மூலம் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பிற துறைகளில் பணிகள் மேற்கொண்டதற்கான உறுதித் தன்மை பெறப்பட்டு, இதர ஆவணங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர், தலைமை அலுவலகத்தின்  தொழில்நுட்பக் குழுவால் பரிசீலிக்கப்படும். இக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்னர், வாரிய ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.   வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர், விலைப்புள்ளிகள் திறக்கப்படும்.

தலைமைப் பொறியாளரால், குறைந்த விலைப்புள்ளி கோரிய ஒப்பந்தாரரின் விலைப்புள்ளியினை திட்ட மதிப்பீட்டுடன் ஒப்பீட்டு,  தளவாடப் பொருட்களின் நடப்பு விலைகளை சரிபார்த்த பின்னர்,  கூடுதலாக இருக்கும் பட்சத்தில், குறைந்த விலைப்புள்ளி கோரிய ஒப்பந்ததாரரிடம் விலைப்புள்ளியை  குறைப்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர், ஒப்பந்ததாரர் தெரிவிக்கும் விலைப்புள்ளி நியாயமாக இருக்கும் பட்சத்தில்  விலைப்புள்ளி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு  வாரிய ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும். வாரிய ஒப்புதல் பெறப்பட்ட பின்னர்,  ஜல் ஜீவன்  திட்ட உயர்மட்டக் குழு  ஒப்புதல் அளித்தபின் பணி ஆணை வழங்கப்படும். எனவே, குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும் உரிய விதிகளின்படி மேற்கொள்ளப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

Related Stories: